31/03/2011

இந்தியா அபார வெற்றி, இறுதிப் போட்டியில் நுழைந்தது!

இந்தியா - பாகிஸ்தான் இடையே இன்று மொஹாலியில் நடந்த உலக கோப்பை இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா 29 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

மொஹாலியில் இன்று பாகிஸ்தான் - இந்தியா இடையே உலக கோப்பை இரண்டாவது அரையிறுதி போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோனி பேட்டிங் தேர்ந்தெடுத்தார். ஆட்டத்தின் துவக்கத்தில் ஷேவாக் அதிரடியாக விளையாடி 38 ரன்கள் சேர்த்தார். டெண்டுல்கர் மற்றும் ஷேவாக் முதல் விக்கெட் ஜோடியின் அதிவேக ரன் சேகரிப்பு இந்தியாவை நல்ல நிலைக்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷேவாக் 38 ரன்களுக்கு எல்பிடபிள்யூ ஆனார்.
அதன் பின்னர் இந்தியாவின் ரன் சேகரிப்பு வேகம் தடைபட்டது. சச்சின் டெண்டுல்கர் மட்டுமே இந்திய அணியில் மிக நன்றாக விளையாடினார். அவர் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் ரெய்னாவின் அதிரடி பேட்டிங்கில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 260 ரன்கள் சேர்த்தது.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் வஹாப் ரியாஸ் அபாரமாக பந்துவீசி இந்திய அணியின் 5 விக்கெட்டுக்களைச் சாய்த்தார். வெற்றிபெற 261 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் துவக்கம் நன்றாக இருந்தாலும் குறிப்பிட்ட இடைவெளியில் அந்த அணியின் விக்கெட்கள் விழுந்து கொண்டிருந்ததால் ரன்ரேட் விகிதம் பாதிக்கப்பட்டது. இறுதியில் பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 231 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. துவக்க ஆட்டக்காரர் ஹஃபீஸ் 43 ஓட்டங்களையும் மிஸ்பா உல் ஹக் 56 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இன்று இந்திய பந்து வீச்சும் ஃபீல்டிங்கும் குறிப்பிடத்தக்க விதத்தில் நன்றாக இருந்தது. பந்து வீசிய ஷகீர் கான், ஆஷிஷ் நெஹ்ரா, பட்டேல், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் என அனைவருமே தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர்.

இன்றைய போட்டியில் இந்தியா வென்றதன் மூலம், ஏப்ரல் 2 ம் தேதி (சனிக்கிழமை) மும்பையில் இடம்பெறவிருக்கும் இறுதிப்போட்டியில் நுழைந்தது. அன்று இந்திய அணி இலங்கையுடன் பலப் பரீட்சை நடத்த இருக்கிறது.

இன்றைய போட்டியில் 85 ரன்கள் எடுத்து இந்திய அணியின் ஸ்கோர் கவுரவமான நிலைக்கு உயரச்செய்த சச்சின் டெண்டுல்கர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெண்டுல்கர் குறைந்த ரன்களில் இருக்கும் வேளையில் அவரின் இரு கேட்ச்களைப் பாகிஸ்தான் அணியினர் தவற விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.