11/04/2011

15 சிக்சர் 15 பவுண்டரி வாட்சன் உலக சாதனை; ஆஸி. வெற்றி


ஆஸ்திரேலிய அணியின் ஷேன் வாட்சன் ஒரு போட்டியில் அதிகபட்சமாக 15 சிக்சர்கள் அடித்து சாதனை புரிந்துள்ளார். மேற்கு இந்திய தீவுகளைச் சேர்ந்த மார்ஷல் கனடா அணிக்கெதிரான போட்டியில் 12 சிக்சர்கள் அடித்து இருந்ததே இதுவரை உலக சாதனையாக இருந்தது. இந்தச் சாதனையை ஷேன் வாட்சன் முறியடித்தார்.
ஆஸ்திரேலிய அணி வங்க தேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. மிர்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் வங்க தேச அணிகள் மோதின. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் சேர்த்தது.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஷேன் வாட்சனின் அதிரடி ஆட்டத்தால் 26 ஓவர்களிலேயே 232 ரன்கள் குவித்து வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. ஷேன் வாட்சன் 96 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்சர்கள் விளாசி 185 ரன்கள் குவித்தார்.