13/05/2011

திமுகவுக்கு எதிரான கோபத்தை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர் : ஜெயலலிதா

 


திமுகவுக்கு எதிரான கோபத்தை வாக்காளர்கள் இத்தேர்தலில் காண்பித்துள்ளார் என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா  கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பது குறித்து இன்று மாலை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். இதன் போது அவர் கூறியதாவது:

தேர்தல் வெற்றி எங்களுக்கு கிடைத்த வெற்றி அல்ல. ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. மக்களுக்கு கிடைத்த வெற்றி. திமுகவுக்கு எதிரான கோபத்தை வாக்காளர்கள் தங்கள் வாக்குகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். தி.மு.க., ஆட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். மக்கள் தேர்தலுக்காக காத்திருந்தனர். வாய்ப்பு கிடைத்ததும் தி.மு.க., ஆட்சியை தூக்கி எறிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இத்தேர்தலில் பணபலம் தோல்வி அடைந்துள்ளது.
தமிழகத்தின் பொருளாதார நிலையை அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு சீரமைக்கும். தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சியின் போது பொருளாதார நிலை சீர்தூக்கியே இருந்திருக்கிறது.

கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழகத்தை தி.மு.க., ஆட்சி சீரழித்து விட்டது. 1 லட்சம் ரூபாய் கடனில் தமிழக மக்களை ஆழ்த்தியுள்ளது. ஒரு கட்டடம் முழுமையாக சிதைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மற்றொரு புதிய கட்டடத்தை மேல் எழுப்ப வேண்டிய கட்டத்தில் அ.தி.மு.க., இருக்கிறது. அதை திறம்பட செய்து நல்லாட்சி செலுத்துவோம். அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும்.

இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு நல்ல வாழ்க்கை ஏற்படுத்தி தர வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமை. இலங்கை தமிழர்களின் இந்த நிலைக்கு அந்நாட்டு அரசு தான் காரணம். இதனை மாற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கலாம். அப்படி பொருளாதார தடை விதித்தால் இலங்கை அதிபர் ராஜபக்ஷே பணிந்து தான் ஆகவேண்டும். மேலும் போர்க்குற்றம், இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். இதற்கு மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும். அதனை நாமும் வலியுறுத்துவோம்.

தேர்தல் வெற்றிக்காக தமிழக மக்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் 18 மாதங்களில் நிறைவேற்றப்படும். அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகள் நலத்திட்டங்கள் மற்றும் நல்லாட்சிக்கு வித்திடும் வாக்குறுதிகளை கொண்ட ஒரு முழுமையான தேர்தல் அறிக்கையாக இருந்தது என்பதை இந்த தருணத்தில் நினைவு கூறுகிறேன்.

தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளால் இந்த முறை தேர்தல் நேர்மையாக, நியாயமாகவும் நடந்துள்ளது. மக்களின் உண்மையான உணர்வுகளை தேர்தல் கமிஷனின் நடத்தை விதிமுறைகள் அனுமதித்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்திய தேர்தல் கமிஷனுக்கு மனமார்ந்த் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆளுநர் அழைப்பு விடுத்த பின்னரே, நாங்கள் பதவி ஏற்கும் தேதி குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார்.