இந்தியா த்ரில்லிங் வெற்றி, கோப்பையை வென்றது!
இந்தியா இலங்கை அணிகளுக்கிடையே மும்பை மைதானத்தில் இன்று நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையைத் தோற்கடித்து கோப்பையை வென்றது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளிடையே கோப்பை யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் இறுதி போட்டி இன்று நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று ஆரம்பத்தில் பேட்டிங் தேர்வு செய்யும் அணியே வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், டாஸ் போட இரு அணி கேப்டன்களும் மைதானத்துக்கு வந்தனர்.
இந்திய அணி கேப்டன் டோனி ரசிகர்களின் பலத்த கரகோசத்துக்கிடையே டாஸை வீசினார். ஹெட் விழுந்தது. ரவி சாஸ்திரி இந்திய கேப்டன் டோனி டாஸ் வென்றதாக அறிவித்த வேளையில், இலங்கை அணி கேப்டன் சங்ககரா தான் டாஸ் வீசிய வேளையில் ஹெட் அல்லது டைல் என எதுவுமே கூறவில்லை என்று கூறி குழப்பினார்.
இதனால் குழப்பம் ஏற்பட்ட நிலையில், நடுவர் மீண்டும் டாஸ் வீசப்பணித்தார். இரண்டாவது டாஸ் வீசியதில் இலங்கை அணி கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
இலங்கை அணியின் துவக்கத்தை இந்திய அணி ஆரம்ப பந்து வீச்சாளர்கள் தகர்த்தனர். ஆரம்ப ஸ்பெல்லில் பந்து வீசிய ஜகீர்கான், 5 ஓவர்கள் பந்துவீசி 3 மெய்டன் ஓவர்களுடன் 6 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். அந்த அணியின் தடுமாற்றத்தை அவ்வணியின் கேப்டனும் துணை கேப்டனும் தடுப்பாட்டம் ஆடி நிமிர்த்தினர்.
இந்திய அணியில் இன்றைய ஆட்டத்துக்குச் சேர்க்கப்பட்டிருந்த ஸ்ரீசாந்தின் பந்து வீச்சு படு மோசமாக இருந்தது. அவர் 8 ஓவர்கள் பந்துவீசி 52 ரன்களை வாரி வழங்கினார். யுவராஜ் சிங் மற்றும் படேலின் பந்து வீச்சு குறிப்பிடத்தகும்படி இருந்தது. இந்திய அணியின் இறுதி ஓவர்களில் இலங்கை அணி அடித்து விளாசியது. இறுதி 5 ஓவர்களில் 53 ரன்களை அந்த அணி எடுத்தது. முதல் ஸ்பெல்லில் நன்றாக பந்து வீசிய ஜகீர்கானின் இறுதி ஸ்பெல்லில் அந்த அணி 54 ரன்களை அடித்து குவித்தது. இறுதியில் அவ்வணி 50 ஓவர்களில் 274 ரன்களை எடுத்தது.
வெற்றிபெற 275 என்ற சற்று கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்கத்திலேயே ஷேவாக் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்பட்ட டெண்டுல்கரும் வெறும் 18 ரன்னுடன் நடையைக் கட்டியதோடு மைதானத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. பின்னர் கவுதம் கம்பீரும் கோஹ்லியும் அணியைச் சற்று தூக்கி நிறுத்தினர். பின்னர் கம்பீருடன் டோனி அணி சேர்ந்தார். இருவரும் மிக அபாரமாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கம்பீர் எதிர்பாராதவிதமாக 94 ரன்களில் செஞ்சுரியை நழுவவிட்டார். பின்னர் டோனியுடன் சேர்ந்த யுவராஜ் சிங் ஜோடி அணியை வெற்றிபெற வைத்தது.
இறுதியில் 9 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது. 91 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் டோனி ஆட்டநாயகனாகவும் உலக கோப்பை போட்டிகளில் 4 ஆட்டநாயகன் விருதுகள் பெற்று மிக அபாரமாக தன் திறமையை வெளிப்படுத்திய யுவராஜ் சிங் தொடர் ஆட்ட நாயகனாகவும் தேர்வு பெற்றனர்.
இறுதியில் இந்தியா உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.


<< Home