27/08/2011

3 பேரின் உயிர்களை காக்க சோனியா முன்வர வேண்டும் : கருணாநிதி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 பேரின் தூக்குதண்டனையை இரத்து செய்து
அவர்களை காப்பதற்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்வர வேண்டுமென திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். காங்கிரஸுடன் கூட்டணி நல்லுறவை திமுக நீடித்து வரும் நிலையில் கருணாநிதி இக்கோரிக்கையை முன்வைத்திருப்பது மத்திய அரசுக்கு அழுத்தம் பிரயோகிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு எதிர்வரும் செப்.9ம் திகதி வேலூர் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இது பற்றி ஊடகவியலாளர்கள் கருணாநிதியிடம் கேட்ட போது,

நான் தூக்கு தண்டனை என்பதே கூடாது என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்துள்ளேன். அது இந்த மூன்று பேருக்கும் பொருந்தும். குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் ஏற்கெனவே இருபது ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டனர்.

அவர்கள் செய்தது குற்றம் என்றாலும் கூட அவர்கள் சிறையில் இருந்ததை கருத்தில்கொண்டு அவர்களை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற நம்மல் முடிந்த முயற்சிகளை எல்லாம் மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியமாகும். தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் 3 பேரின் உயிரை காப்பாற்ற உருக்கத்துடன் செயல்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் சோனியா காந்தியும் இந்த பிரச்சனையில் அக்கறையுடன் 3 உயிர்களை காக்க முன் வரவேண்டும். இதுகுறித்து முடி வெடுக்க மத்திய அரசும், மாநில அரசும் இந்த பிரச்சனையில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு இந்த 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.