27/08/2011

இங்கிலாந்து தொடரில் இந்திய அணிக்கு முதல் வெற்றி

ஹாவ், ஆகஸ்ட் 26 : இங்கிலாந்து தொடரில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியில் சஸக்ஸ் அணியை  இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் போட்டித் தொடர் வரும் செப்டம்பர் 3 -ம் தேதி துவங்குகிறது.
இதற்கு முன்னதாக வியாழக்கிழமை இந்தியா, சஸக்ஸ் அணிகள் இடையே பயிற்சி போட்டி ஹாவில் நடைபெற்றது. மழை காரணமாக போட்டி 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

முதலில் விளையாடிய  சஸக்ஸ் அணி 45 ஓவரில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பின்னர் சுலப இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி 45 ஓவரில் 235 ரன்கள் எடுக்க வேண்டுமென இலக்கு மாற்றப்பட்டது.

பார்த்திவ் பட்டேல்(55 ரன்கள்) வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தார். சச்சின் டெண்டுல்கர் 21 ரன்களுக்கும், சுரேஷ் ரெய்னா 12  ரன்களுக்கும்  வெளியேறினர்.

அபாரமாக ஆடிய இளம் வீரர்களான விராத் கோலி (71 ரன்கள்), ரோகித் சர்மா(61 * ரன்கள்) இணைந்து வெற்றியை உறுதி செய்தனர்.
இந்திய அணி 40.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்து  6  விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.