09/10/2011

அ.தி.மு.க. ஆட்சியில் மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது; திருச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருச்சி மேற்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் விஜயா ஜெயராஜ் மற்றும் மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. பொருளாளரும், முன்னாள் துணை முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் திருச்சியில் பிரசாரம் செய்தார்.
 
காஜாமலை மெயின் ரோட்டில் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்கினார். இதைத்தொடர்ந்து இந்தியன் வங்கி காலனி, கீழ பஞ்சப்பூர், ராமச்சந்திரா நகர், எடமலைப்பட்டிபுதூர், கிராப்பட்டி, கருமண்டபம், பிராட்டியூர், ராம்ஜிநகர், மிளகுபாறை ஆகிய இடங்களில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
தி.மு.க. ஆட்சியில் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் கருணாநிதி செய்து முடித்தார். 50 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 5 ஆண்டுகளில் செய்து முடித்தவர் கருணாநிதி.   ஆனால் சட்டசபை தேர்தலில் ஏதோ ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து அ.தி.மு.க.வுக்கு பொதுமக்கள் வாக்களித்தார்கள் ஆனால் அந்த எதிர்பார்ப்பு மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. ஜனநாயக
ஆட்சி நடத்தாமல் சர்வாதிகார ஆட்சியை ஜெயலலிதா நடத்துகிறார்.
 
குறிப்பாக தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீது பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைத்து வருகிறார்.   சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர் இந்த தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராகி எம்.எல்.ஏ. பதவியை ஏற்க செல்லும் வழியில் சாலை விபத்தில் இறந்தது துயரமான செய்திதான். அவரது குடும்பத்தினருக்கு இந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதா வாய்ப்பளித்திருக்க வேண்டும்.
 
இல்லாவிட்டால் சிறுபான்மை இனத்தை சேர்ந்த வேறு யாரையாவது வேட்பாளராக நிறுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் தி.மு.க. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு இருக்காது. ஆனால் இந்த தொகுதிக்கு சம்பந்தமில்லாத ஒருவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளார். இதிலிருந்து சிறுபான்மை சமுதாயத்துக்கு ஆதரவானவர்கள் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட இந்த தேர்தல் வாய்ப்பை வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தேர்தலுக்காக மக்களை சந்திக்கும் இயக்க மல்ல தி.மு.க., எந்த சூந்நிலை யிலும் மக்களை சந்திக்கும் இயக்கம் தான் தி.மு.க. அந்த தைரியத்துடன் தான் இந்த தேர்தலை சந்தித்து வருகிறோம்.  
 
தி.மு.க. அரசின் 21 லட்சம் குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தில் 3 லட்சம் வீடுகள் தயாராகி விட்டன. மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்திருந்தால் அவை முழுவதும் கட்டி வழங்கப்பட்டு இருக்கும். உயிர் காக்கும் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் லட்சக்கணக்கான பேர் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த திட்டங்கள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ளன. எனவே இந்த ஆட்சியில் நடைபெறும் தவறுகளை திருத்தி கொள்ள இடைத்தேர்தல்-உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்.
 
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.