14/05/2011

2012 இல் திமுக காணாமல் போகும்?

திருச்செந்தூர், பென்னாகரம் இடைத்தேர்தல்களில் திமுகவின் தொடர் வெற்றிகளுக்கு 'அஞ்சா நெஞ்சன்' என்று திமுகவினரால் வர்ணிக்கப்படும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் 'திருமங்கலம் ஃபார்முலா'வே காரணம் என்று சொல்லப்பட்டது. தென் மாநிலங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததோடு, முக்கிய எதிர்கட்சியான அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களையும் திமுகவிற்குள் அழைத்து வந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் அழகிரி.

மைனாரிட்டி அரசாக காலம் தள்ளிய திமுக அரசுக்குக் கிடைக்கும் ஒன்றிரண்டு இடைத்தேர்தல் வெற்றிகளும் அவசியம் என்பதால் திமுக கணக்கின்றிப் பணத்தை வாரி இறைத்தது. தேர்தல் மேற்பார்வையாளர்களே கையைப் பிசைந்து நிற்குமளவுக்கு அழகிரியின் திருமங்கலம் பார்முலா ஒர்க்-அவுட் ஆகியது. இந்தத் தொடர்வெற்றிகளால் திமுகவில் அழகிரியின் கை சற்று மேலோங்கியது. இந்நிலையில் 2011 இல் அதிமுக காணாமல்போகும் என்று அறிக்கைவிட்டு அதிமுகவினரின் வயிற்றில் மேலும் புளியைக் கரைத்தார்.

அழகிரியின் அதிரடி நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து காய்நகர்த்தி வந்த அதிமுக தலைமை, கோவை செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு திமுக அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களை மாநகராட்சிகள் வாரியாக நடத்தி இறுதிஆர்ப்பாட்டத்தை மதுரையில் நடத்தி, கொல்லன் தெருவில் ஊசி விற்கும் சக்தியை அதிமுக இன்னும் இழந்துவிடவில்லை என்று நிரூபித்தார்.

இப்படியாக வெகுண்டெழுந்த அதிமுகவுக்கு 2G ரூபத்தில் பம்பர் பரிசு கிடைத்தது. 2G ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியும், அவரது தாயாரும் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லி, அதையே திமுகவுக்கு எதிரான கடைசி ஆயுதமாகப் பயன்படுத்த நினைத்தார் ஜெயலலிதா.

நாடாளுமன்றக்கூட்டுக்குழு வேண்டி, தேசிய எதிர்கட்சிகளுடன் ஒத்தூதியது, ஆ.ராசாவைக் கைது செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது ஆகியவற்றின்மூலம் திமுகவுக்கு எதிரான இறுதிகட்ட அரசியல் செய்வதற்கு அடுத்தடுத்து கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் நழுவவிடாது திறமையாகப் பயன்படுத்தி இந்த தேர்தலில் திமுகவை மூன்றாம் இடத்திற்கு ஜெயலலிதா  தள்ளிவிட்டார்.

தமிழக தேர்தல்களில் திமுக, புதிதாக முளைத்த தேமுதிகவைவிட பின்னுக்குச்சென்று மூன்றாம் இடத்தைப் பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும், திமுகவில் பழம் தின்று கொட்டை போட்ட பகுத்தறிவு பிம்பங்கள் எல்லாம் திமுகவின் குடும்ப அரசியலை ஜீரணித்து அல்லது ஒவ்வாமல் அதிலிருந்து விலகி கடலில் கரைத்த பெருங்காயமாகிப் போய்விட்டதால் அடுத்தடுத்த தேர்தல்களில் திமுகவை வழிநடத்த உருப்படியான இரண்டாம் கட்டத்தலைமை இல்லை.

கனிமொழி மீதான ஊழல் வழக்குகள், அழகிரி-ஸ்டாலின் பனிப்போர், தயாநிதி-கலாநிதி சகோதரர்களின் திமுகவை லவட்டும் திட்டம் ஆகியவற்றால், எதிர்வரும் காலங்களில் திமுக உட்கட்சிப்பூசல் வெளிப்படையாக வெடிக்கும் வாய்ப்புகள் அதிகமுள்ளன. தேமுதிகவின் அசுர வளர்ச்சி, அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்ற புத்துணர்ச்சி ஆகியவற்றை வைத்துப்பார்க்கும்போது திமுகவிற்கு அடுத்த ஓரிரு தேர்தல்களில் நம்பிக்கை தரக்கூடிய வாய்ப்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் அழகிரியின் ஆருடம் பொய்த்ததோடு, அது அவரது கட்சிக்கே பொருந்திப்போய் 2012 இல் திமுக இல்லாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே தோன்றுகிறது!