2ஜி: கனிமொழி சிறையில் அடைப்பு
இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரருமான கனிமொழி வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டார்.
அவருடன், கலைஞர் தொலைக்காட்சியின் மேலாண்மை இயக்குநர் ஷரத்குமாரும் சிறையிலடைக்கப்பட்டார்.
அவர்களை ஜாமீனில் விட முடியாது என்று சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத்துறையின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி தீர்ப்பளித்ததை அடுத்து, கனிமொழியும், ஷரத்குமாரும் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குற்றப்பத்திரிகை
கடந்த மாதம் 25-ம் தேதி, அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சிபிஐ தனது இரண்டாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், கனிமொழி, ஷரத்குமார் உள்பட ஐந்து பேர் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, கனிமொழி மற்றும் ஷரத்குமாரை காவலில் வைக்க உத்தரவிடக்கூடாது என்றும், அவர்கள் விசாரணைக்காக தினசரி நீதிமன்றத்தில் ஆஜராகத் தயாராக இருக்கிறார்கள் என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கனிமொழி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, அவர் கருணாநிதியின் மகள் என்பதால் குறிவைக்கப்படுவதாகவும், அவர் ஒரு பெண், தாய் என்ற காரணங்கள் காரணமாக அவரை சிறையிலடைக்கக் கூடாது என்று வாதிட்டார்.
அதையடுத்து, இரு முறை ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு இன்று திங்கட்கிழமை பிற்பகலில் வழங்கப்பட்டது. காலையில் இருந்தே நீதிமன்ற வளாகம் நிரம்பி வழிந்தது, திமுக எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் பெருமளவில் கூடியிருந்தார்கள். கனிமொழியுடன் அவரது கணவர், மகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
நீதிமன்ற நிகழ்வுகள்
பிற்பகல் இரண்டரை மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னதாக, கனிமொழியும், ஷரத்குமாரும் நீதிபதி முன்னலையில் நிறுத்தப்பட்டார்கள்.
நீதிபதி தனது இருக்கைக்கு வந்ததும், அவர்களது ஜாமீன் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும், இருவரையும் காவலில் எடுக்குமாறும் உத்தரவிட்டார்.
குற்றத்தின் தீவிரம், தன்மை, குற்றச்சாட்டுக்களின் அளவு, சாட்சிகளின் பலம், சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்பு ஆகியவற்றைக் கரு்த்தில் கொண்டும் அவர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.
மேலும் தங்களுக்கு எதற்காக ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்பதை குற்றம் சாட்டப்பட்டவர்கள் பூர்வாங்கமாக நியாயப்படுத்தத் தவறிவிட்டதாகவும் கூறிய நீதிபதி, அவர்களது கோரிக்கையை நிராகரிப்பதாகத் தெரிவித்தார்.
கனிமொழி, நீதிமன்றத்தில் மிகுந்த கன்னியமாக நடந்துகொண்டதைக் கருத்தில் கொண்டு அவர் மீது பரிவு காட்ட தான் விரும்பிய போதிலும், குற்றத்தின் தீவிரத்தைக் கருதியும், அவருக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலும், அவர் மீது எந்தப் பரிவும் காட்ட முடியவில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலான சாட்சிகள், கலைஞர் தொலைக்காட்சியில் பணியாற்றுவதால், குற்றம் சாட்டப்பட்டவர்களை ஜாமீனில் விட்டால் அந்தச் சாட்சிகள் மீது அவர்கள் தங்கள் செல்வாக்கை செலுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று நீதிபதி கூறியுள்ளார்.
அதையடுத்து, அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நீதிமன்றக் காவல் நாளை வரை இருக்கும். அதன்பிறகு, தினசரி அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருப்பதால் அது நீடிக்கப்படும்

<< Home