23/05/2011

மரியம் பிச்சை மரணத்தில் சந்தேகம் : சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஜெ.உத்தரவு

இன்று காலை நடைபெற்ற சாலை விபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை காலமானார்.  அவரது உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சென்னையில் எம்.எல்.ஏ.,வாக பதவியேற்றதும், தனி ஹெலிகாப்டர் மூலம் மதியம் 2 .30 மணி அளவில் அவர் திருச்சிக்கு வந்தார்.

அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர் அமைச்சர் மரியம்பிச்சையின் குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்த முதலமைச்சர், பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அமைச்சர் சாவில் மர்மம் இருக்கிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பொதுமக்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனவே மரியம் பிச்சை மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்படும் என தெரிவித்தார்.

முன்னர் மரியம் பிச்சையின் மரணம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர் அதில் தெரிவித்ததாவது :

மரியம் பிச்சை 3 முறை கவுன்சிலராக திறம்பட பணியாற்றியவர். கட்சியின் மீது மிகுந்த விசுவாசம் கொண்டவரும், ஆற்றல் படைத்தவருமான, அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது இழப்பினால் ஆழ்ந்த துயரத்தில் உள்ள அவரது மனைவி மற்றும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் பலியானதை அடுத்து திருச்சியின் முக்கிய வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பல இடங்களுக்கு செல்லும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் தவிர்க்க நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் மரியம் பிச்சையின் மறைவு குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் உம் இரங்கல் தெரிவித்தார்.

தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வக்ஃபு வாரிய அமைச்சரான மரியம் பிச்சை வாகன விபத்தில் மரணமடைந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அடையச் செய்கிறது.  அதிமுகவின் தளபதிகளில் ஒருவராக விளங்கிய மரியம் பிச்சை, திருச்சியில் ஊழல் மற்றும் அரசியல் அராஜகங்களைத் தகர்த்தெறிந்து மக்கள் பேராதரவுடன் சட்டமன்ற உறுப்பினராகி, அமைச்சராகிய நிலையில் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவரை இழந்து வாடும் அதிமுகவிற்கும், திருச்சி மேற்கு தொகுதி மக்களுக்கும், குடும்பத் தலைவரை இழந்து வாடும் மரியம் பிச்சை குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.