08/04/2011

உலகக் கோப்பையை வென்ற டோணியும், கம்பீரும் எதிரும் புதிருமாக மோதல்

சென்னை: இன்று நடைபெறும் முதல் ஐபிஎல் போட்டியில் இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வென்று கொடுத்த டோணியும், கெளதம் கம்பீரும் எதிரும் புதிருமாக நின்று மோதப் போகிறார்கள்.


4வது ஐபிஎல் தொடர் இன்று தொடங்குகிறது. கண்கவர்தொடக்க விழாவுக்குப் பின்னர் முதல் போட்டி தொடங்குகிறது.

இப்போட்டியில் நடப்புச் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

டோணி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வலுவாக காணப்படுகிறது. அதேசமயம், இதுவரை கங்குலி தலைமையில் செயல்பட்டு வந்த கொல்கத்தா அணி கெளதம் கம்பீரின் தலைமையில் தனது முதல் போட்டியில் களம் இறங்குகிறது.

இந்தியா உலக்க கோப்பையை வெல்ல டோணியும், கம்பீரும்தான் முக்கியக் காரணம். இறுதிப் போட்டியில் இருவரும் இணைந்து அபாரமாக ஆடினர். இருவரும் சேர்ந்து செஞ்சுரி பார்ட்னர்ஷிப்பைப் போட்டு புதிய சாதனையும் படைத்தனர். இந்த நிலையில் உலகக் கோப்பை வெற்றியின் சூடு கூட இன்னும் குறையாத நிலையில் இருவரும் எதிரும் புதிருமாக நின்று மோதப் போவது ரசிகர்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸைப் பொறுத்தவரை அதன் பேட்டிங்தான் மிகப் பெரிய பலம். டோணி நல்ல பார்மில் உள்ளார். அதேபோல சுரேஷ் ரெய்னாவும் பார்மில் இருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸின் நாயகன் முரளி விஜய்யும் மீண்டும் ஒரு அசத்தலானை பெர்பார்மன்ஸை கொடுக்கத் தயாராகி விட்டார்.

நெருக்கடியான சமயத்தில் கை கொடுக்க பத்ரிநாத் இருக்கிறார். அனிருத்தா ஸ்ரீகாந்த்தும் பேட்டிங்கில் கலக்கக் கூடியவர்தான். இப்படி பேட்டிங்கில் சிறப்பான நிலையி்ல் இருக்கும் சென்னை அணிக்கு நல்ல பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.

முரளிதரன் அணியில் இல்லாததால், தற்போது ரவி்ச்சந்திரன் அஸ்வினுக்கு பெரும் பொறுப்பு வந்து சேர்ந்துள்ளது. அவரும் இந்திய மைதானங்களில் பிரமாதப்பபடுத்துவார் என்பதால் இந்தியாவின் பந்து வீச்சு நாயகனாக அவர் உருவெடுக்க வாய்ப்புள்ளது. கடந்த 2010 தொடரில் அஸ்வின்தான் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்பது நினைவிருக்கலாம்.

அதேபோல அல்பி மார்க்கல், ஸ்காட் ஸ்டைரிஸ், டிம் செளத்தி, சூரஞ் ரந்தீவ் ஆகியோரும் சென்னை அணிக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

கொல்கத்தாவைப் பொறுத்தவரை கம்பீர்தான் முழுப் பலமும். இவர் போக ஜேக்கஸ் கல்லிஸ், யூசுப் பதான், தமிழகத்தைச் சேர்ந்தவரான எல்.பாலாஜி, உலகக் கோப்பையில் அசத்திய ரியான் டென் டஸ்சாட் ஆகியோரும் கொல்கத்தாவுக்குப் பட்டையைக் கிளப்பும் வெற்றியைக் கொடுக்க பரபரப்பாக காத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் இன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டோணி தலைமையிலான ஸ்டிராட்டஜி வெல்லப் போகிறது, கம்பீர் தலைமையிலான போராட்டம் வெல்லப் போகிறதா என்பது இன்று இரவு தெரிய வரும்.

கருணாநிதி நாட்டைப் பிடித்த சனி, ஸ்டாலின் ஒரு பிணி-விஜயகாந்த் கடும் தாக்கு

பண்ருட்டி: இந்த நாட்டைப் பிடித்த சனியன் கருணாநிதி. அவரது மகன் ஸ்டாலின் ஒரு பிணி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மிகக் கடுமையாக தாக்கியுள்ளார்.


பண்ருட்டியில் இன்று பிற்பகல் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்துப் பேசினார் விஜயகாந்த். மிகப் பெரிய அளவில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில், விஜயகாந்த் பேசுகையில் கூறியதாவது:

என்னைப் பற்றி விமர்சிக்கிறார் மு.க.ஸ்டாலின். உண்மையில், இந்த நாட்டைப் பிடித்த சனியன்தான் உங்க அப்பா. உங்க அப்பாதான் இந்த நாட்டின் சனியன். நீங்கள் இந்த நாட்டைப் பிடித்த பிணி.

எங்களது கூட்டணியை எண்ணெயும், தண்ணீரும் போல என்கிறார்கள். உண்மையில் உங்களது கூட்டணிதான் எண்ணெயும், தண்ணீரும் போல. எங்களது கூட்டணி, தேனும் பாலும் போல. எங்களது கூட்டணி மக்கள் கூட்டணி.

உங்களை சமூக நீதி காத்த கூட்டணி என்கிறீர்கள். ஆனால் உண்மையில் அது சமுதாய விரோத கூட்டணி. பாமக தலைவர் சொன்னாரே, கலைஞர் அலை வீசுகிறது என்று. ஆனால் அனல் காற்றுதான் வீசுகிறது.

என்னைக் காடுவெட்டி குரு பயமுறுத்துகிறார். எனக்குப் பயமெல்லாம் கிடையாது. உங்க தலைவர்தானே அன்று கலைஞர் ஆட்சிக்கு சைபர் மார்க் போட்டார். கருணாநிதி ஆட்சிக்கு அதிக சைபர்களைப் போட்டவர் ராமதாஸ்தான். இன்று அந்த சைபர் கூட்டணியில் போய்ச் சேர்ந்திருக்கிறார்.

தமிழினத் தலைவர் என்று கூறிக் கொள்கிறாரே கலைஞர், உண்மையில் அவர் தமிழினத்தை அழித்த தலைவர். அவரால் ஒரு இனமே அழிந்து போய் விட்டது. தமிழ் மக்களுக்காகப் போராடுவேன் என்று கூறுகிறார் கருணாநிதி, அவரை இலங்கைப் படையிடம் சிக்கி உயிரிழந்த 550 மீனவர்களின் ஆவி கூட மன்னிக்காது.

கருணாநிதி ஆட்சி சாதனை அல்ல, பெரும் வேதனைதான். மக்கள் அவர்களுக்கு தீர்ப்பளிக்கப் போகிறார்கள். நிச்சயம் அவர்களை வீட்டுக்கு அனுப்புவார்கள்.

டெல்லியில் இன்று அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் இருக்கிறார். எதற்காக, ஊழலை நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்பதற்காக. ஆனால் கலைஞரோ, அண்ணாவின் பெயரைச் சொல்லி நாட்டை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

மே 13க்குப் பிறகு தெரியும், மானாடுதா, மயிலாடுதா என்பது. அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும். கலைஞர் வீடா, தமி்ழ்நாடா என்பதை வாக்களிக்கப் போகும் முன்பு நினைத்துப் பார்த்து முடிவு செய்து கொண்டு வாக்களியுங்கள் என்றார் விஜயகாந்த்.