14/08/2011

தோனி கேப்டன்ஷிப்பில் தோல்வியடைந்த முதல் டெஸ்ட் தொடர்

இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பேர்மிங்ஹாமில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸாலும்


242 ரன்களாலும் அபார வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் ஐசிசியின் புதிய தரவரிசையில் இந்தியாவிடம் இதுவரை இருந்த நம்பர் 1 இடத்தை இங்கிலாந்து தட்டிப்பறித்துள்ளது.

இப்போட்டியில் முதலில் இன்னிங்ஸில் இந்தியா 224 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 710 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்திருந்த போது போட்டியை டிக்ளே செய்தது.

பதிலுக்கு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி இன்று 244 ரன்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்திய துடுப்பாட்டத்தில் தோனி 74 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டார். டெண்டுல்கர் 40 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட்டில் ஆட்டமிழந்தார். தோனி அடித்த பந்து பந்து கிராம் ஸ்வானின் கையில் பட்டு எதிர்முனை விக்கெட்டை வீழ்த்தியது. அந்நேரம் சச்சின் கிரீஸிற்கு வெளியில் நின்றதால் துரதுஷ்ட வசமாக ஆட்டமிழந்தார்.

ஷேவாக் இரண்டாவது இன்னிங்ஸிலும் டக்கில் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் ஆண்டர்சன் 4 விக்கெட்டுக்களையும், ப்ரோட், ஸ்வான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீத்தினர்.

போட்டி நாயகனாக முதல் இன்னிங்ஸில் இரட்டை சதமடித்த அலியெஸ்டர் கூக் தெரிவானார்.  இப்போட்டியில் வென்றதன் மூலம் 3-0 என டெஸ்ட் தொடரையும் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.

இந்திய கேப்டன் மகேந்திரசிங் தோனி, இப்போட்டி பற்றி கருத்து தெரிவிக்கையில், உலகின் மிகச்சிறந்த அணி என்ற இடத்தை பிடித்தமைக்கு வாழ்த்துக்கள். உலகின் மிகச்சிறந்த களத்தடுப்பாளர்களை கொண்ட அணியல்ல இந்தியா. நாங்கள் எங்களது துடுப்பாட்டம், பந்துவீச்சு இரண்டில் மட்டுமே பெருமை கொள்கிறோம். ஆனால் இம்முறை பல நேரங்களில் நாம் நல்ல பந்துவீச்சுக்களையும் வீசவில்லை.

ஆனால் இப்படி சில போட்டிகளில் தோல்வி அடைந்திருப்பதால் எதுவும் மாறப்போவதில்லை.  நான் எனது அணியை நினைத்து இன்னமும் பெருமை கொள்கிறேன்.  நாங்கள் இந்தியாவுக்காக விளையாடும் போது, எப்படியும் வென்றுவிடுவோம் என அளவுகடந்த எதிர்பார்ப்பை எமது ரசிகர்கள் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது எல்லா நேரத்திலும் சாத்தியப்படாது. முதலிடத்தில் இருப்பது, இல்லாமல் இருப்பதல்ல முக்கியம். சீராக பயணித்து கொண்டிருப்பதே முக்கியம். இப்போட்டிக்காக எம்மை தயார் செய்து கொண்ட விதத்தில் நான் சந்தோஷப்படுகிறேன். ஆனால் எமது அணிக்கு பொருத்தமில்லாத தொடரிகளில் இதுவும் ஒன்றாகி விட்டது என கூறினார்.

இங்கிலாந்து கேப்டன் அண்ட்ரூவ் ஸ்ட்ரோஸ் கருத்து தெரிவிக்கையில், நம்பர். 1 இடத்தை பிடிப்பது என்பது எமது நீண்டகால இலக்கு. இப்போது அது அடையப்பட்டிருப்பது பெருமையையும், மகிழ்ச்சியையும் அதிகமாக ஏற்படுத்தியிருக்கிறது என்றார்.

1999 உலக கோப்பை போட்டிகளுக்கு பிறகு இங்கிலாந்து உலகின் மிக மோசமான அணியாக கணிக்கப்பட்டது. இப்போது அதிலிருந்து மீண்டு நாம் மெல்ல  மெல்ல முன்னேறி உயரத்தை அடைந்திருக்கிறோம் என போட்டி நாயகனாக தெரிவான அலஸ்டேர் கூக் கருத்து தெரிவித்தார்.

தோனி கேப்டன்ஷிப்பில் இந்தியா தோற்ற முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். அத்துடன் உலகின் மிக மோசமான  இன்னிங்ஸ் தோல்வியை பெற்றுக்கொண்ட டெஸ்ட் போட்டிகளில் 15 வது இடத்தை இப்போட்டி பெற்றிருக்கிறது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இறுதி டெஸ்ட் போட்டி எதிர்வரும் 18ம் திகதி ஓவல் மைதானத்தில் இடம்பெறுகிறது.

பறிபோனது முதல் இடம்

பர்மிங்ஹாம், ஆகஸ்ட் 13: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியடைந்தது. இதனால் தரவரிசை பட்டியலில் இதுவரை தக்கவைத்துக்கொண்டிருந்த முதல் இடத்தை இழக்கிறது.  டெஸ்ட் தொடரில் 3-0 என்று முன்னிலை பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி, சர்வதேச தரவரிசையில் முதல் இடத்தை பெறுகிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வென்ற இங்கிலாந்து அணி 2-என்று என, முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்பாஸ்டனில் நடந்தது. இதன் முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 710 ரன்கள் குவித்து “டிக்ளேர்’ செய்தது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 35 ரன்கள் எடுத்திருந்தது.

நான்காவது நாளான இன்று ஆட்டத் தொடர்ந்த இந்திய அணி, முந்தைய நாள் ஸ்கோருடன், மேலும் ரன் எதுவும் எடுக்காத நிலையில் காம்பிர் (14), டிராவிட் (18) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது.  லட்சுமண் (2), ரெய்னா (10) ஆகியோரும் விரைவாக ஆட்டமிழந்தனர். சற்று நம்பிக்கை ஏற்படுத்திய சச்சின், 40 ரன்கள் எடுத்திருந்தபோது பரிதாபமாக ரன் அவுட்டானார்.
அமித் மிஸ்ரா, 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். 18 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 40 ரன்கள் எடுத்தநிலையில், பிரவீண் குமார், பிராட்டின் “ஷார்ட் பிட்ச்’ பந்தில் வீழ்ந்தார். தோனி, டெஸ்ட் அரங்கில் தனது 23வது அரைசதம் கடந்தார். அம்பயரின் தவறான தீர்ப்பில் இஷாந்த் சர்மா, “டக்’ அவுட்டானார். கடைசியில் ஸ்ரீசாந்த்தும் (5) அவுட்டாக, இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 244 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தோனி (74) அவுட்டாகாமல் இருந்தார். ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் குக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி வென்றுள்ளது. மேலும் இந்த தோல்விகளின் மூலம் இந்திய அணி தரவரிசை பட்டியலில் இதுவரை தக்கவைத்துக்கொண்டிருந்த முதல் இடத்தை இழக்கிறது.  டெஸ்ட் தொடரில் 3-0 என்று முன்னிலை பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி, சர்வதேச தரவரிசையில் முதல் இடத்தை பெறுகிறது.