பாலோ ஆனை தவிர்க்குமா இந்திய அணி
லண்டன் டெஸ்ட்டில் பாலோ ஆனை தவிர்க்க இந்திய அணி கடுமையாக போராட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இப்போட்டியின் 3 – வது நாளான நேற்று (ஆகஸ்ட் 20) இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 591 ரன்கள் குவித்து ஆட்டத்தை முடித்துக் கொண்டது.
ரவி போபரா 44 ரன்களுடனும், மேட் பிரையர் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்சை ஆடத்தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக வீரேந்திர சேவாக்கும், ராகுல் டிராவிட்டும் களமிறங்கினார்கள்.
3 – வது டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்சிலும் ரன் எடுக்காமல் அவுட்டான சேவாக், இதிலாவது ஏதாவது சாதிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவர் தவிடுபொடியாக்கினார்.
4 நிமிடங்கள் மட்டுமே களத்தில் நின்ற சேவாக் 6 பந்துகளில் 8 ரன்களை எடுத்து ஆன்டர்சன் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி ஏமாற்றம் அளித்தார்.
பின்னர் ராகுல் டிராவிட்டுடன் விவிஎஸ் லஷ்மண் ஜோடி சேரந்தார்.
அணிக்கு கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லஷ்மண் 2 ரன்களில் நடையைக் கட்டினார்.
இதனால் இந்திய அணி 13 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், டெண்டுல்கர் களமிறங்கினார்.
3 – வது விக்கெட்டுக்கு டிராவிட்டும், டெண்டுல்கரும் 50 ரன்கள் சேர்த்தனர்.
இந்த ஜோடியின் ஆட்டம் இந்திய அணியின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுழற்பந்துவீச்சாளர் கிரேமி ஸ்வான் அதற்கு வேட்டு வைத்தார்.
ஒரு மணி நேரம் தாக்குப்பிடித்து 23 ரன்கள் எடுத்த டெண்டுல்கரை ஸ்வான் வெளியேற்றினார்.
மறுமுனையில் டிராவிட் தனி ஆளாக போராடிய நிலையில், சுரேஷ் ரெய்னா களமிறங்கினார்.
ரன் கணக்கை தொடங்கும் முன்னரே, சுரேஷ் ரெய்னாவையும் ஸ்வான் ஆட்டமிழக்கச் செய்தார். ஸ்வானின் பந்துவீச்சில் விக்கெட்கீப்பர் பிரையரால் சுரேஷ் ரெய்னா ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.
பின்னர் நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய இஷாந்த் ஷர்மாவையும் ஸ்வான் உடனடியாக வெளியேற்றினார்.
ஸ்வான் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இதன்பிறகு கேப்டன் தோனி களம் புகுந்தார்.
இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் டிராவிட் நிதானமாக ஆடி 93 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
3 – வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்திருந்தது.
டிராவிட் 57 ரன்களுடனும், தோனி 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
பாலோ – ஆனை தவிர்க்க இந்திய அணிக்கு இன்னும் 288 ரன்கள் தேவை. ஆனால், கைவசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே இருப்பதால் இது கடினமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மழை கை கொடுத்தால் மட்டுமே இந்திய அணி தோல்வியில் இருந்து தப்ப முடியும் என்பது உறுதியாக தெரிகிறது.
இந்த டெஸ்ட்டிலும் தோல்வியைத் தழுவினால், தரவரிசைப் பட்டியலில் 3 இடத்திற்கு தள்ளப்படும் என்பதால் இந்திய அணி திரிசங்கு சொர்க்கத்தில் உள்ளது.

