23/05/2011

2011 Over The Limit Part-09


மரியம் பிச்சை மரணத்தில் சந்தேகம் : சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஜெ.உத்தரவு

இன்று காலை நடைபெற்ற சாலை விபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை காலமானார்.  அவரது உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சென்னையில் எம்.எல்.ஏ.,வாக பதவியேற்றதும், தனி ஹெலிகாப்டர் மூலம் மதியம் 2 .30 மணி அளவில் அவர் திருச்சிக்கு வந்தார்.

அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர் அமைச்சர் மரியம்பிச்சையின் குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்த முதலமைச்சர், பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அமைச்சர் சாவில் மர்மம் இருக்கிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பொதுமக்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனவே மரியம் பிச்சை மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்படும் என தெரிவித்தார்.

முன்னர் மரியம் பிச்சையின் மரணம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர் அதில் தெரிவித்ததாவது :

மரியம் பிச்சை 3 முறை கவுன்சிலராக திறம்பட பணியாற்றியவர். கட்சியின் மீது மிகுந்த விசுவாசம் கொண்டவரும், ஆற்றல் படைத்தவருமான, அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது இழப்பினால் ஆழ்ந்த துயரத்தில் உள்ள அவரது மனைவி மற்றும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் பலியானதை அடுத்து திருச்சியின் முக்கிய வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பல இடங்களுக்கு செல்லும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் தவிர்க்க நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் மரியம் பிச்சையின் மறைவு குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் உம் இரங்கல் தெரிவித்தார்.

தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வக்ஃபு வாரிய அமைச்சரான மரியம் பிச்சை வாகன விபத்தில் மரணமடைந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அடையச் செய்கிறது.  அதிமுகவின் தளபதிகளில் ஒருவராக விளங்கிய மரியம் பிச்சை, திருச்சியில் ஊழல் மற்றும் அரசியல் அராஜகங்களைத் தகர்த்தெறிந்து மக்கள் பேராதரவுடன் சட்டமன்ற உறுப்பினராகி, அமைச்சராகிய நிலையில் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவரை இழந்து வாடும் அதிமுகவிற்கும், திருச்சி மேற்கு தொகுதி மக்களுக்கும், குடும்பத் தலைவரை இழந்து வாடும் மரியம் பிச்சை குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மரியம்பிச்சை பலி: திருச்சி செல்கிறார் ஜெயலலிதா!

சாலை விபத்தில் பலியான அமைச்சர் மரியம் பிச்சையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக முதல்வர் ஜெயலலிதா இன்று மதியம் தனி விமானம் மூலம் திருச்சி செல்ல உள்ளார்.

திருச்சியில் இன்று காலை சென்னை சென்று கொண்டிருந்த போது சமயபுரம் அருகே பாடாலூர் என்ற இடத்தில் முன்னால் சென்றுகொண்டிருந்த டிப்பர் லாரியை காரி முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிரே வாகனம் ஒன்று வந்ததால் டிரைவர் காரை இடதுபுறமாக திருப்பினார். அப்போது அருகில் சென்றுகொண்டிருந்த டிப்பர் லாரி மீது அமைச்சரின் கார் வேகமாக மோதியது. இந்த விபத்தில் கார் முன்பகுதியில் அமர்ந்திருந்த அமைச்சர் மரியம் பிச்சை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடல் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் அதிமுகவினர் மருத்துவமனையின் முன்பு குவிந்தனர்.

அமைச்சர் மரியம் பிச்சை மரணத்திற்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில், திருச்சியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களில் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மரியம் பிச்சை இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று மதியம் தனி விமானம் மூலம் திருச்சி செல்ல உள்ளார்.

மரியம் பிச்சையின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து சங்கிலியாண்டவர்புரத்தில் உள்ள மரியம் தியேட்டருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மரியம் பிச்சையின் உடல் அடக்கம் இன்று மாலை பாலக்கரையில் நடைபெறும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.



தோனியின் போராட்டம் வீண் : பெங்களூருடன் தோற்று இரண்டாம் இடத்திற்கு சென்றது சென்னை

சென்னை - பெங்களூர் அணிகளுக்கு இடையில் இன்று பெங்களூரில் இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி போராடி தோற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்திற்கும் சென்று விட்டது.


இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 128 ரன்களை மாத்திரமே எடுத்தது.
தோனி, சாஹா தவிர ஏனையோர் 10 க்கும் குறைவான ஓட்டங்களையே எடுத்தனர்.

தோனி அதிரடியாக ஆடி ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 70 ரன்களை எடுத்தார். இதில் 6 சிக்ஸர்களும், 3 பவுன்றிகள் அடங்கும். பந்துவீச்சில் சஹீர் கான், அர்விந்த், வெட்டோரி தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி வழமை போல கிரிஸ் கேய்லின் அதிரடியில் இலகுவாக வெற்றி பெற்றது. கிரிஸ் கேய்ல் 50 பந்துகளில் 75 ரன்களும், கோலி 29 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர்.

பந்துவீச்சில் அஷ்வின், மோர்க்கல் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் வெட்டோரி தலைமையிலான பெங்களூர் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை கைப்பற்றியுள்ளது.

எனினும் இன்று நடைபெற்ற  கொல்கத்தா-மும்பை அணிகளுக்கான மற்றுமொரூ போட்டியில் கொல்கத்தா அதிர்ச்சி தோல்வி அடைந்ததால் சென்னைக்கு இரண்டாவது இடம் உறுதியாகிவிட்டது.

இதேவேளை இன்றுடன் முடிவடைந்த அனைத்து முதல் சுற்றுப்போட்டிகளின் படி காலிறுதி போட்டிக்கு சென்னை, பெங்களூர், கொல்கத்தா, மும்பை அணிகள் தகுதி பெற்றுள்ளன. எனினும் இவற்றில் முதலிரு இடத்தை பிடிக்கும் அணிகள் ஒரு போட்டியிலும், மூன்றாம், நான்காம் இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றுமொரு போட்டியிலும் மோதும் என்ற விதிமுறையின் அடிப்படையில் எதிர்வரும் 24ம் திகதி மும்பையில் இடம்பெறும் முதலாவது காலிறுதி போட்டியில் சென்னை : பெங்களூர் அணிகள் மீண்டும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கும், தோல்வி அடையும் அணிக்கு இன்னுமொரு போட்டியும்  காத்திருக்கிறது.