19/05/2011

பாடப் புத்தகங்களிலிருந்து கருணாநிதி கவிதைகளை நீக்க உத்தரவு

சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வினியோகிப்பதை தமிழக பள்ளி கல்வித்துறை திடீரென நிறுத்தியுள்ளது. இந்தப் பாடப் புத்தகங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கவிதைகளும் சிறுகுறிப்புகளும் இடம் பெற்றுள்ளதால் அந்தப் பகுதிகளை நீக்கிவிட்டு புத்தகங்களை வெளியிட அதிமுக அரசு முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

சமச்சீர் கல்வி தமிழ்ப் பாடப் புத்தகங்களில் செம்மொழி பாடலும் தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள், பிசிராந்தையார் பாடலுக்கு அவர் எழுதிய விளக்கம் உள்ளிட்ட பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றை நீக்க அதிமுக அரசு முடிவு செய்துள்ளது.


இவ்வாண்டு விநியோகிப்பதற்காக 3.5 கோடி இலவசப் புத்தகங்கள் 65 கல்வி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மெட்ரிக் பள்ளிகளுக்கு வழங்குவதற்காக 1 கோடி புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


இவற்றை கல்வி மாவட்டம் வாரியாக பிரித்து கடந்த 12 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தன. புத்தகங்களை பள்ளிகளுக்கு பிரித்து வழங்க மாவட்ட கல்வி அலுவலகங்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவகலங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இந்நிலையில், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு சமச்சீர் கல்வி பாடப் புததகங்கள் விநியோகத்தை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் சென்னையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் அரசிடமிருந்து மறு உத்தரவு வரும் வரை சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்யக் கூடாது என்ற வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்

நடிகர் ரஜினிகாந்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில்
உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ரஜினியின் குடும்பத்தினர் அவரது அருகில் இருந்து கவனித்து வருகின்றனர்.
அவரை சில தினங்களுக்கு முன் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்  நிலையில் இன்று ரஜினியை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தறிந்தார்.
இச் சந்திப்பின் போது,, விஜய்காந்துடன் அதேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமசந்திரன், கேப்டன் டிவி நிர்வாக இயக்குநர் எல்.கே. சுதீஷ் ஆகியோரும் உடனிருந்தனர்
இது இவ்வாறிருக்கக நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள்  மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக ராமச்சந்திரா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கவலை தெரிவித்தார். ரஜினியை நேசிப்பவர்கள் அனைவருக்கும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. ரஜினியிடம் பேசினேன். அவரது மனைவியை தொடர்ந்து தொடர்புகொண்டு வருகிறேன். ரஜினி படிப்படியாகக் குணமடைந்து வருவதாக எஸ்எம்எஸ் மூலம் அவர் தகவல் தெரிவித்தார். கூடியவிரைவில் ரஜினி குணமடைய பிரார்த்திப்போம் என அமிதாப் பச்சன் குறிப்பிட்டார்.