13/04/2011

ஐ.பி.எல் விளையாடும் இலங்கை வீரர்களை உடனடியாக நாடுதிரும்புமாறு இலங்கை கிரிக்கெட் சபை அறிவிப்பு!


இந்தியா ஐ.பி.எல்  போட்டிகளில் விளையாடிவரும் இலங்கை அணி வீரர்களை
உடனடியாக நாடுதிரும்புமாறு இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்துக்கு 63 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளதால்,
இதற்கான ஆயத்த பயிற்சிகளில் இலங்கை அணி வீரர்கள் பங்குபெற்ற வேண்டுமென எதிர்பார்ப்பதாகவும், இதனால் உடனடியாக ஐ.பி.எல் விளையாடிவரும் இலங்கை வீரர்களை நாடுதிரும்புமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அறிவித்துள்ளார்.

டெக்கான் சார்ஜஸ் அணிக்கு குமார் சங்ககார மற்றும் கொச்சி அணிக்கு மஹெல ஜெயவர்த்தன ஆகியோர் கேப்டனாக செயற்பட்டு வருவதுடன், டில்ஷான், மாலிங்க, முரளிதரன் மேலும் பல இலங்கை கிர்க்கெட் வீரர்கள் ஐ.பி.எல் இல் விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது.

மே 11ம் திகதி இங்கிலாந்துடனான போட்டி ஆரம்பமாகவுள்ளதால், மே 5ம் திகதிக்குள் அனைத்து வீரர்களும் இலங்கையில் இருக்க வேண்டுமென, சிறீலங்கா கிரிக்கெட் சேர்மென் டி.எஸ்.டி.சில்வாவும் தெரிவித்துள்ளார்.

இவ் அறிவிப்பு அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தினாலும் பிரச்சினை இல்லை. முதலில் இலங்கை அணியை வளப்படுத்த கவனமெடுங்கள். பிறகு ஏனைய பிரீமியர் லீக் போட்டிகளில் பங்குபற்றுவது பற்றி பார்க்கலாம் என சிறிலங்கா கிரிக்கெட் சபை செயலாளர் நிசானந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த உலக கோப்பை போட்டிகளின் போது இறுதிப்போட்டியை காண இந்தியா விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஏனைய அரசியல் பிரதிநிதிகளை இந்திய அரசு சரிவர கவனிக்கவில்லை என முன்னதாக இலங்கை அரசு சார்பில் அதிருப்தி எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உலககோப்பை தோல்வியால், மீனவர்களை படுகொலை செய்ததா இலங்கை இராணுவம்? : மதுரை நீதிமன்றில் வழக்கு


கடந்த ஏப்ரல் 2 -ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற விக்டஸ்,
என்பவருக்கு சொந்தமான விசைபடகு ஒரு வாரமாகியும் கரை திரும்பவில்லை அந்த படகில் சென்ற 4 மீனவர்களும் கரை திரும்பாததால் உறவினர்கள் வேதனை அடைந்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு இலங்கை நெடுந்தீவு அருகே மீனவர் சடலம் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை சென்ற மீனவர்கள் அந்த உடல் காணாமல் போன மீனவர் விக்டஸ் என்பவரின் உடல் தான் என்பதை உறுதிபடுத்தி இருந்தனர்.
அந்த உடலில் கடுமையான காயங்கள் இருந்ததாக உறவினர்கள் கூறினர். இலங்கை கடற்படையினர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை இந்திய அணி தோற்கடித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நமது மீனவர்களை பிடித்து தாக்கி கொன்றிருக்கலாம் என்று கூறினர்.
இந்த நிலையில் மேலும் ஒரு சடலம் சோழியக்குடி அருகே கரை ஒதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து உறவினர்கள் சென்று பார்த்த போது அந்த உடல் மீனவர் அந்தோனி என்பவரது உடல் என்பது உறுதி படுத்தப்பட்டது.  

இலங்கை அணி இந்திய அணியிடம் கிரிக்கெட் போட்டியில் தோற்றதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இலங்கை கடற்படையினர் இது போல அரக்கத்தனமாக நடந்து கொண்டிருப்பதாக மீனவர்கள் மீண்டும் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதே குற்றச்சாட்டை முன்வைத்து, ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த நல்லதம்பி எம்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தின் தாக்ல் செய்த மனு தொடர்பில், தற்போது பதில் அளிக்குமாறு மதுரை உயர் நீதிமன்றம், மத்திய உள்துறை செயலாளர், இலங்கையில் உள்ள இந்திய தூதரகம், தமிழக உள்துறை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அடுத்த முதல்வர் யார் ?தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட அழகிரி முடிவு


தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட அழகிரி முடிவு செய்துள்ளார். தேர்தல் முடிவுக்கு பின், தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மாநில அரசியலில் தீவிரம் காட்ட முடிவு செய்துள்ளதாக அவரின் சமீபத்திய நடவடிக்கைகள் அமைந்துள்ளன என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, தமிழக தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிக்காக, தான் கடுமையாக உழைத்துள்ளதாக குறிபிட்ட அவர், ஸ்டாலினும் அவ்வாறு உழைத்துள்ளதாக குறிபிட்டார். தற்போது திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் கருனாநிதியா, ஸ்டாலின் என்ற கேள்வி ஏற்கனவே ஆரம்பித்த நிலையில் இனியும் தான் மெளனமாக இருந்தால் தமிழக அரசியலில் தாக்கு பிடிக்க முடியாது என்பதை உணர்ந்துள்ளார். இதனால் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், ஆட்சி மற்றும் கட்சியமைப்பில் தனக்கு சாதகமான மாற்றங்களை கேட்டு கருனாநிதிக்கு நெருக்கடி தருவார் என எதிர்பார்க்கபடுகிறது.
தமிழகத்தில் ஸ்டாலினும், அழகிரியும் தனியாக இயங்கிவருகிறார்கள் என்பது குறிபிடத்தக்கது.