தோல்வி அடைந்தது திமுக அல்ல, மக்களே! என திமுகவுக்காக
பிரச்சாரம் செய்த நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். இன்று காலை கோபாலபுரம் வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.
திமுகவை மக்கள் சரியாக உணரவில்லை - குஷ்பு
திமுகவுக்கு தோல்வியே அல்ல. மக்கள் தான் தோல்வி அடைந்துள்ளனர். 2 ஜி வழக்கு குறித்து ஊடகங்கள் தவறான செய்திகளை திரித்து கூறிவிட்டன. இதனால் தான் திமுகவுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டு விட்டது.
இருந்தாலும் அவை பொய் என்பதை சட்டபூர்வமாக நிரூபிப்போம் என அவர் தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளில் மக்கள் எவ்வளவு கஷ்ட்டப்பட போகிறார்கள் என தெரியவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான திட்டங்களை வழங்கி மக்களை காப்பாற்றிய திமுகவை அவர்கள் சரியாக உணரவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
மக்கள் தீர்ப்பை கேலி செய்கிறார் குஷ்பு : நடிகை விந்தியா கண்டனம்
குஷ்புவின் கருத்துக்கு, நடிகை விந்தியா கடும் கண்டனம் விடுத்துள்ளார். தேர்தலின் போது அதிமுக சார்பில் வாக்கு சேர்த்த விந்தியா இது தொடர்பில் தெரிவிக்கையில்
குஷ்பு அரசியலில் பக்குவப்படாதவர் என்பதை நிரூபித்துள்ளார். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அந்த தீர்ப்பை குறை சொல்வதும் கேலி செய்வதும் குஷ்புவின் அறியாமையை காட்டுகிறது. இந்த தேர்தலில்தான் முதல் முறையாக தோல்வியைப் பார்த்திருக்கிறார் அவர். என்வேதான் அவரால் தாங்க முடியவில்லை. தமிழக மக்கள் ஒட்டு மொத்தமாக தி.மு.க. ஆட்சி போக வேண்டும் என வாக்களித்துள்ளனர். அப்படியெனில் அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறதா....
நிறைய வீடுகளில் பெண்கள் வெளியே வந்து பட்டாசுகள் வெடிப்பதை பார்க்க முடிந்தது. நான் மூன்று தேர்தல்களை பார்த்துள்ளேன். வெயில், கஷ்ட நஷ்டம் ஆகியவை எனக்கு பழகி விட்டது. குஷ்புவுக்கு அது தெரியாது. சினிமா உலகில் சந்தோஷமாக இருந்தார். முதல் தடவையாக தேர்தல் பிரசாரம் செய்து வெயில் கொடுமைகளை அனுபவித்தார்.
இதனால் தோல்வியை தாங்கிக்கொள்ள முடிய வில்லை. தப்புத் தப்பாக பேசுகிறார். அரசியலுக்கு வந்த பிறகு கட்டுப்பாடு வேண்டும். எது வேண்டுமானாலும் பேசக் கூடாது. குஷ்பு இதை உணர்ந்து செயல்பட வேண்டும்," என்றார்.
வடிவேலு மௌனம்!
இதேவேளை, நேற்று மத்திய அமைச்சர் அழகிரி வீட்டுக்கு சென்றிருந்த நடிகர் வடிவேலு, பின்னர் பாண்டியன் ஹோட்டலுக்கு சென்றார். அப்போது அவரை இடைவிடாதது துரத்தி சென்ற செய்தியாளர்கள், வடிவேலுவிடம், 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என சொன்னீர்களே என கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த வடிவேலு முழுமையான முடிவுகள் வரட்டும் என்று விட்டு நடையை கட்டினார். தொடர்ந்து செய்தியாளர்கள் பேட்டி எடுக்க வேண்டும் என பாண்டியன் ஹோட்டலை முற்றுகையிட்ட போதும், அவர் செய்தியாளர்களை சந்திப்பதை அறவே தவிர்த்தார்.
வடிவேலுவின் பேச்சு தான் காமெடியானது! - சிங்கமுத்து
இதேவேளை, 'சின்னபுள்ள தனமாக' பேசிவந்த வடிவேலுவின் பேச்சை மக்கள் வெறுத்தே விட்டனர். அவருடைய பேச்சு தான் காமெடி ஆகிவிட்டது என அதிமுக சார்பில் பிரச்சாரம் மேற்கொண்ட நடிகர் சிங்கமுத்து கூறினார்.
இது குறித்து சிங்கமுத்து மேலும் கூறியதாவது: தமிழக மக்கள் ஊழலுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஏற்கனவே ஆட்சி செய்த ஜெயலலிதாவின் நிர்வாகக் திறனையும் கருணாநிதியின் நிர்வாகத்திறனையும் ஒப்பிட்டுப்பார்த்து ஜெயலலிதா நிர்வாகமே சிறந்தது என்ற முடிவுக்கு வந்து அ.தி.மு.க. விடம் ஆட்சியை கொடுத்துள்ளனர்.
இவரது பிரசாரம் சிறு பிள்ளைத்தனமானது என்று வாக்காளர்கள் ஒதுக்கி விட்டனர். அ.தி.மு.க.வுக்கு வாக்களித்ததன் மூலம் மக்கள் தப்பு செய்து விட்டார்கள் என்று நடிகை குஷ்பு கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டுக்கு வாழ வந்தவர் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இவருக்கு அரசியல் பற்றி என்ன தெரியும். மக்கள் தீர்ப்பை விமர்சிக்க எந்த தகுதியும் அவருக்கு இல்லை.
கடந்த ஆட்சியில் தமிழகம் முழுவதும் ஊழல் மலிந்து கிடந்தது. சினிமாத்துறையில் குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கம் செலுத்தினர். யாரையும் பிழைக்க விடவில்லை. மக்கள் வெறுத்து போய் இருந்தனர். தேர்தலில் தங்கள் கோபத்தை காட்டி விட்டனர்.
ஜெயலலிதா தமிழகத்தை செழிப்பான மாநிலமாக மாற்றுவார். நடிகர் வடிவேலு தி.மு.க. வுக்கு ஓட்டு கேட்டார். தி.மு.க. கூட்டணிக்கு 200 இடம் கிடைக்கும் என்றும் ஆருடம் கணித்தார். அவரது பிரசாரம் காமெடியாக முடிந்து விட்டது.
எனக்கு எதிராகவும் பொய் வழக்கு போட்டு கைது செய்ய வைத்தார். விஜயகாந்த் அடிப்பார் என பயந்துதான் தி.மு.க. பக்கம் ஓடினார். அக்கட்சிக்கு ஓட்டு கேட்டார். எம்.ஜி.ஆர். ரசிகன் என்று தன்னை கூறிக் கொண்டு இரட்டை இலைக்கு ஓட்டு போடாதீர்கள் என்றார். விஜயகாந்தை மட்டும் வசை பாடினார்.
மக்கள் சரியான தீர்ப்பைத் தான் வழங்கி உள்ளனர். ஜெயலலிதா சட்டம்- ஒழுங்கை சீராக்குவார். ரவுடிகள் ஒழிக்கப்படுவார்கள். தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெறும். காலியான அரசு கஜானா நிரம்பும் இவ்வாறு அவர் கூறினார்.