12/05/2011

ஐ.பி.எல் : புதிய சாதனை படைத்த லசித் மாலிங்க

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனைக்குரியவராகியுள்ளார் இலங்கையரான லஷித் மாலிங்க.
இவர் இதுவரை 37 போட்டிகளில் பங்குபற்றி 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இவ்வருட தொடரில் 11 போட்டிகளில் பங்குபற்றி 26 விக்கெட்டுகளை வீழ்த்தியமையும் மாலிங்கவின் மற்றொரு சாதனையாகும்.
2008 இல் பாகிஸ்தானை சேர்ந்த சொஹைல் தன்விர் -ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடி 22 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
அவ்வருடம் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.
2009இல் டெக்கன் சார்ஜஸ் சார்பில் விளையாடிய ஆர்.பி.சிங் 23 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்தார். அவரது அணி சுற்றுப்போட்டியை வென்றது.
கடந்த வருடம் வித்தியாசமான ஒரு நிலைமை தோன்றியது. பிரக்யன் ஓஜா அதிகூடிய விக்கெட்டுக்களை எடுத்தபோதும் அவரது அணியால் சமபியனாக முடியவில்லை. சென்னை சுப்பர் கிங்ஸ் சிறந்த துடுப்பாட்டத்தின் மூலம் சம்பியனாகியது.
இப்போது நடைபெறும் ஐ.பி.எல். இருபதுக்கு 20 போட்டியில் மாலிங்க மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர் என கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் தலைவர் அடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
'அவருக்கு அனுபவம் வந்துவிட்டது. அவர் மிகவும் பயங்கரமான இருபதுக்கு 20 பந்து வீச்சாளர். அவரது யோக்கர் மிக ஆபத்தானது. பவுன்ஸர்கள் தடுமாற வைப்பவை. அவரது பந்துவீச்சில் பல்வேறு வகைகளை காணலாம்' என கில்கிறிஸ்ட் கூறினார்.

நாளை சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: பிற்பகலுக்குள் முடிவு தெரிய ஏற்பாடு

ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிற்பகலுக்குள் முடிவுகள் தெரிந்துவிடும் என தலைமைத் தேர்தல் கொமிஷனர் குரேஷி கூறினார். தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் கொமிஷனர் குரேஷி டெல்லியில் நிருபர்களிடம் நேற்று விளக்கினார்.

அப்போது அவர் கூறியதாவது, ஐந்து மாநில தேர்தலில், குறிப்பாக தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் இதற்கு முன் நடந்த தேர்தல்களில் நடந்திராத வகையில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 78.80 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இது 2006 ம் ஆண்டு சட்டசபை தேர்தலைவிட 11.26 சதவீதம் அதிகம். மேற்கு வங்கத்தில் 84.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த தேர்தலைவிட 3.04 சதவீதம் கூடுதல். அதே போல் அசாமில் 76.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த தேர்தலை காட்டிலும் 0.36 சதவீதம் அதிகம். கேரளாவில் 75.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 3.79 சதவீதம் அதிகம். புதுச்சேரியில் 85.57 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த தேர்தலைவிட சிறிய அளவில் தான் (0.13 சதவீதம்) அதிகம்.
அசாம் தவிர கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கத்தில் பெண்கள் அதிகளவில் ஓட்டுப் போட்டு உள்ளனர். ஐந்து மாநிலங்களிலும் மொத்தம் 839 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 8.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும். பிற்பகலுக்கு முடிவுகள் தெரிந்துவிட வாய்ப்பு இருக்கிறது.

வாக்கு எண்ணிக்கைக்காக மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கையில் 43 ஆயிரத்து 982 அதிகாரிகளும், பாதுகாப்புக்கு 17 ஆயிரத்து 700 பாதுகாப்பு படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் அனைத்து நடவடிக்கைகளும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வாக்காளர்கள் இந்த முறை அதிகளவில் வாக்குப்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக கேரளாவில் 8,820 வாக்காளர்கள் தாங்கள் வெளிநாட்டில் இருப்பதாக பதிவு செய்துள்ளனர்.
 இவர்களில் 4,639 பேர் ஓட்டளித்து உள்ளனர் என்று குரேஷி தெரிவித்தார்ர்