10/06/2011

கருணாநிதி கட்டியது சட்டசபை அல்ல, பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனி கட்டிடம்:அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வைகை செல்வன்

கட்டிட கலையை கொச்சை படுத்தும் வகையில் புதிய தலைமை செயலக கட்டிடத்தை முன்னாள் முதல்வர் உருவாக்கியுள்ளார். பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனி போல் அதை கட்டி உள்ளார் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வைகை செல்வன்குறிப்பிட்டார்.
சட்டசபையில் அருப்புக்கோட்டை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வைகை செல்வன் இலக்கிய கலை நயத்துடன் சங்ககால பாடல்களை உவமையுடன் விளக்கி மிக அழகாக பேசினார். அவரது பேச்சை முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்பட அனைவரும் ரசித்து கேட்டனர்.

அவரது பேச்சின் சுருக்கம்:- நான் பிறந்தது திருமங்கலம், வசிப்பது மயிலாப்பூர், தேர்தலில் வெற்றி பெற்று வந்தது அருப்புக்கோட்டை அங்கு ஒரு தீய சக்தியை தோற்கடித்து வா என்று என்னை நிறுத்தி, ஏழை எளிய சாதாரண தொண்டனும் எம்.எல்.ஏ. ஆக முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர் புரட்சித் தலைவி.
ஏழைப் பெண்களின் தாலிக்கு தங்கம் கொடுத்து ஏழைகளின் கண்ணீரை துடைத்தவர் எங்கள் அம்மா, ஏழைக்கு தங்கமாகவும், எதிரிக்கு சிங்கமாகவும் விளங்குபவர். சட்டம் - ஒழுங்கு என்று சொன்னால் அதற்கு சரியான முதல்-அமைச்சர் நம் அம்மா என்றுதான் மக்கள் கருதுகிறார்கள்.
கடந்த ஆட்சி காலத்தில் செம்மொழி மாநாடு நடத்தி தனது குடும்ப உறுப்பினர்களை முதல் 10 வரிசையில் ஒட்டு மொத்தமாக அமரச் செய்தவர் கருணாநிதி. தமிழ் மொழிக்கு எதுவும் செய்யாமல் தமிழ் மொழியை வைத்து பிழைத்தது கருணாநிதி குடும்பம்.

தமிழ்நாட்டின் பாரம்பரியத்துக்கு எடுத்துக்காட்டு கட்டிடக்கலையாகும். தஞ்சை பெரிய கோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில்களில் கட்டிட கலையின் வெளிப்பாடுகளை காணலாம். ஆனால் கட்டிட கலையை கொச்சை படுத்தும் வகையில் புதிய தலைமை செயலக கட்டிடத்தை முன்னாள் முதல்வர் உருவாக்கியுள்ளார். பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனி போல் அதை கட்டி உள்ளார்.

வட மாநிலத்தில் இருந்து ஆட்களை கொண்டு வந்து அவர்களை வதைத்து அந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அங்கு நடந்த பல விபத்துக்கள் மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளன. ரூ.2 கோடிக்கு புதிய தலைமை செயலக கோபுரத்தில் செட் போட்டு வீணடித்துள்ளனர்.

அதனால்தான் நீதி விசாரணைக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தது தி.மு.க. அரசு. கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொல்கிறார். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதை கருணாநிதி தெரிந்து கொண்டார் இவ்வாறு அவர் பேசினார்.

இலவச கலர் டீவி திட்டம் இரத்து : மேலும் பல அதிரடி அறிவிப்புக்களை விடுத்தார் ஜெயலலிதா

இலவச கலர் டீவி திட்டம் இரத்து செய்வது உட்பட மேலும் பல அதிரடி அறிவிப்புக்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் அறிவித்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டப்பேரவையில் பேசியதாவது:

இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்கவும்; தமிழ்நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறவும்; விலைவாசியைக் கட்டுப்படுத்தவும்; தமிழ்நாட்டை மீண்டும் அமைதிப் பூங்காவாக மாற்றவும் அயராது பாடுபடுவேன் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஐந்து ஆண்டு கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் மக்கள் பட்ட வேதனைகள் சொல்லி மாளாது. சட்டம்-ஒழுங்கு சீரழிவு, கடுமையான மின்வெட்டு, விண்ணை முட்டும் விலைவாசி, மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, கள்ள லாட்டரிச் சீட்டு விற்பனை, ரேஷன் பொருட்கள் கடத்தல், வேலையில்லாத் திண்டாட்டம், போலி மற்றும் காலாவதியான மருந்து விநியோகம், நில அபகரிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளில் தமிழக மக்கள் சிக்கித் தவித்தனர்.  

ஒரு குடும்பத்தின் பிடியில் தமிழ்நாடு சிக்கித் தவித்தது. அதிமுகவின் மக்களாட்சி மலர்ந்தவுடன் சுதந்திரம் கிடைத்த உணர்வு தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.  தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஏழு வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டன. இதுவரையில் இல்லாத அளவிற்கு, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கென்று ஒரு தனி அமைச்சகமும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்கள் சந்தித்த மிக முக்கியமான பிரச்சனை சட்டம்-ஒழுங்கு சீரழிவு.  அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை அமளிக் காடாக மாற்றியது தான் திரு. கருணாநிதியின் கடந்த ஐந்து ஆண்டு கால சாதனை. இதனை சீர்செய்யும் விதமாக சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், நிருவாகத்தை செம்மையாக்கவும் ஆளுநர் உரையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழகக் காவல் துறை இந்தியாவிலேயே சிறந்த காவல் துறை என்றும் ஸ்காட்லாண்டு யார்டு போன்ற உலகில் சிறந்து விளங்கும் காவல் துறைக்கு இணையானது என்றும் பெயர் பெற்று விளங்கியது.  
நான் முதலமைச்சராக பொறுப்பேற்கும் போதெல்லாம், காவலர்கள் தங்கள் பணிகளில் எத்தகைய குறுக்கீடும், இடையூறும் இல்லாமல் தங்கள் கடமையை செவ்வனே செய்வது வாடிக்கை. 

அப்போதேல்லாம் சமூக விரோதிகள் மீதும், தீவிரவாதிகள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாக திகழும் என்பதும் அனைவரும் அறிந்ததே.  எனவே, சட்டம்-ஒழுங்கை மீண்டும் நிலைநாட்டி மக்கள் எவ்வித பயமும் இன்றி அமைதியாக தங்களது வாழ்க்கையை நடத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நான் ஏற்கெனவே எடுத்துள்ளேன்.

காவல் துறையினர் இழந்த பழம் பெருமை விரைவில் மீட்கப்படும் என்பதையும், தமிழகம் விரைவில் முழு அமைதிப் பூங்காவாக மாறும் என்பதையும் இந்த மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தின் மின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து, மக்களுக்கு எவ்வளவு நேரம் மின்சாரம் கிடைக்கும் என்பதே தெரியாத ஒரு நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டனர்.
சென்னை மாநகரில் ஒரு மணி நேரம், மாநிலத்தின் இதரப் பகுதிகளில், மூன்று மணி நேரம் மின் தடை என முந்தைய தி.மு.க. அரசு அறிவித்தது.  ஆனால், உண்மையில், அதற்கு மேலும் அறிவிக்கப்படாத மின் தடையாக மேலும் 2, 3 மணி நேரம் எல்லா பகுதிகளிலும் மின் தடை இருந்தது என்பதை தமிழக மக்கள் அனைவரும் அறிவர்.

மேலும், தொழிற்சாலைகளுக்கு 20 சதவீதம் மின் வெட்டும் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான உச்ச  மின் தேவை காலத்தில் 90 சதவீதம் மின் வெட்டும் அமல்படுத்தப்பட்டது. தேவைக்கேற்ப மின் திட்டங்களை ஏற்படுத்தாததும், நிருவாக சீர்கேடுகளும் தான் இவ்வாறு மின் வெட்டு ஏற்பட முக்கியக் காரணம் ஆகும். கடந்த ஐந்தாண்டு முழுமையும், இவற்றை எல்லாம் மறைத்து, முந்தைய எனது ஆட்சிக் காலத்தில் திட்டங்கள் தீட்டப்படாதது தான் மின் வெட்டுக்குக் காரணம் என உண்மைக்கு மாறான செய்தியை முந்தைய தி.மு.க. அரசு பரப்பி வந்தது.

பழுதடைந்த நிலையில் உள்ள மின் நிலையங்களை உடனே சரி செய்ய போர்க்கால அடிப்படையில் எனது அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  ஜனவரி 2010 முதல் பழுதடைந்த நிலையில் இருந்த வழுதூர் எரிவாயு சுழலி மின் நிலையம், நாங்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்னர் இந்த ஜூன் மாதம் மீண்டும் இயக்கி வைக்கப்பட்டது. 

இதே போன்று, ஓராண்டு காலமாக பழுதடைந்த நிலையில் இருந்த குத்தாலம் எரிவாயு சுழலி மின் நிலையமும் இந்த மாதம் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! இந்த இரண்டு மின் திட்டங்களும் ஓராண்டு காலமாக பழுதடைந்த நிலையில் இருந்தும், அவற்றை சரி செய்ய தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டே வார காலத்திற்குள் இவற்றை சரி செய்து, இவை இரண்டும் இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளன.  

தற்போது மாநிலத்தில் நிலவும் மின் பற்றாக்குறை நிலையை மாற்றி அமைக்க குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களின் அடிப்படையில் எனது அரசு பல்வேறு முயற்சிகளை எடுக்கும்.  நான் ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல பழுதடைந்த மின் நிலையங்கள் உடனடியாக சீரமைக்கப்பட்டுள்ளன.  குறுகிய கால மற்றும் நீண்ட கால மின் கொள்முதல் முறையை இணைத்து லாபகரமான மற்றும் நிலையான மின் கொள்முதல் கொள்கையை எனது அரசு கடைபிடிக்கும்.

அடுத்த ஐந்தாண்டுகளில், மின் வாரியத்தின் நிறுவு திறன் மேலும் 10,000 மெகா வாட்டிற்கும் அதிகமாக அதிகரிக்க, நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  தற்போது, எனது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின் காரணமாக அறிவிக்கப்படாத மின் வெட்டுகள் நிறுத்தப்பட்டு விட்டன. 

மேலும், வரும் ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் தற்போதுள்ள 3 மணி நேர மின் வெட்டு 2 மணி நேரமாகக் குறைக்கப்படும்.  படிப்படியாக, மின் வெட்டே இல்லா மாநிலமாக தமிழகம் விரைவில் மாறும் என்பதை இந்த அவையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தைப் பற்றி சில உண்மைகளை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன். :    தமிழக சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகத் துறைகள் அனைத்தும் புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்தே செயல்பட வேண்டும் என்று நான் உத்தரவிட்டதன் அடிப்படையில் 14-வது சட்டமன்றம் தற்போது  புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வருகின்றது.  சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள புதிய கட்டடத்திலிருந்து புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்பட்டதற்கு ஒரு சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

சட்டமன்றமும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திற்கு மாற்றப்பட்ட ஒரு சில துறைகளும் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள கட்டடத்திற்கு மாற்றி உத்தரவிடப்பட்டது ஏன் என்பதை 20.5.2011 அன்றே ஒரு அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளேன்.

எனினும், ஒரு சில அரசியல் கட்சியினர் சட்டமன்றமும் தலைமைச் செயலகமும் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் இயங்க வேண்டும் எனவும் அந்தப் புதிய கட்டடம் முந்தைய தி.மு.க. அரசால் கட்டப்பட்ட கட்டடம் என்பதால் தான் நான் அதனை மாற்றுவதற்கு உத்தரவிட்டதாக தவறான கருத்தினை தெரிவித்துள்ளனர். அரசு நிருவாகத்தில் நான் என்றுமே அரசியலை புகுத்தியதில்லை என்பதை நடுநிலையாளர் அனைவரும் ஒப்புக் கொள்வர்.

தலைமைச் செயலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படுவதை நான் ஒரு போதும் எதிர்த்தது இல்லை. ஆனால் தற்போது கட்டப்பட்டுள்ள அந்தக் கட்டடத்திலிருந்து பணியாற்றுவதால் நிருவாக குறைபாடு எதுவும் ஏற்படாது என்றால் நான் அங்கிருந்தே பணியாற்றி இருப்பேன்.  அவ்வாறு இயலாது என்பதால் தான் அங்கிருந்து பணியாற்றுவது நிருவாகத்திற்கு குந்தகம் விளைவிக்கும் என்பதால் தான் சட்டமன்றம் மற்றும் அங்கு மாற்றப்பட்ட ஒரு சில துறைகளை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.  

4.7.2007 அன்று பொதுப்பணித் துறையால் வெளியிடப்பட்ட அரசாணையில்  ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில், 8 லட்சம் சதுர அடியில், சட்டமன்றம்  மற்றும் முதலமைச்சர் அலுவலகம் மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்கள், தலைமைச் செயலாளர் அலுவலகம் மற்றும் பொதுத் துறை, உள்துறை மற்றும் நிதித்துறை முதலிய முக்கிய துறைகளுக்காக 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டடம் கட்ட உத்தரவிடப்பட்டது.  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! எந்த ஒரு அறிவார்ந்த அரசாவது  சட்டமன்றம் மற்றும் முதலமைச்சர் அலுவலகம், ஏனைய அமைச்சர் அலுவலகங்கள் மற்றும் 2, 3 துறைகளுக்கு மட்டும் ஒரு புதிய கட்டடத்தை அதுவும் 2 கிலோ மீட்டர் தொலைவில் கட்டுமா?  200 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்ட இந்த பிளாக் ஹ கட்டடத்திற்கு இன்றைக்கு 600 கோடி ரூபாய்க்கு மேலான செலவுக்கு மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
பிளாக் ஹ கட்டடத்தின் மொத்த உட்பரப்பு 97,829 சதுர மீட்டர்கள் ஆகும். அதில், அலுவலக உபயோகத்திற்காக பயன்படுத்தக் கூடியது 47,491 சதுர மீட்டர்கள் தான்.  அதாவது, 49 சதவீதத்திற்கும் குறைவான கட்டட உட்பரப்பையே உபயோகப்படுத்த இயலும்.  ஏனைய கட்டடப் பரப்பு எல்லாம் சுற்றுப் பாதை, நடைக் கூடம், வாஸ்து மீன் தொட்டி போன்ற அலுவலக உபயோகங்கள் அல்லாத வேறு உபயோகங்களுக்கான இடங்கள் தான்.
அந்தக் கட்டடத்தின் வடிவமைப்பு வணிகக் கட்டடங்களைப் போன்று அமைக்கப்பட்டுள்ளதால் தான், அலுவலகத்திற்காக பயன்படுத்தக் கூடிய இடம் 49 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.  சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், 624 கோடி ரூபாய் மக்கள் வரிப் பணத்தை செலவு செய்து கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தில் பாதிக்கு மேல் பயன்படுத்த முடியாத வெற்றிடமாக உள்ளது.  மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.  

பிளாக் ஏ கட்டுவதற்கு உத்தரவு வழங்கி ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு 21.5.2009-ல் அரசாணை எண்.81-ல் ஏனைய அரசுத் துறைகளுக்காக பிளாக் ஏ கட்டடத்தைக் கட்ட அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு சில அரசுத் துறைகள் மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்கள், சட்டமன்றம் மட்டும் ஒரு இடத்திலும், ஏனைய அரசுத் துறைகள் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேறு ஒரு இடத்திலும் செயல்பட வேண்டும் என்று அறிவார்ந்த எந்த அரசும் முடிவு செய்ய இயலுமா? அரசு நிருவாகத்தைப் பற்றி  கிஞ்சித்தும் சிந்திக்காமல் கட்டடம் கட்டப்பட ஆணையிடப்பட்டதால் தான் பெரும் நிருவாக சிக்கல் ஏற்பட காரணமாயிற்று.  
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள பிளாக் ஏ கட்டடத்தில் கட்டடப் பணிகள் முழுமையாக முடிவடையாமலேயே 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் திறப்பு விழா நடத்தப்பட்டது.  அந்தக் கட்டடத்தின் மேற்கூரை  கோபுரம் கட்டி முடிக்கப்படாமலேயே தற்காலிக செட்டிங் போட்டு 3 கோடி ரூபாய்க்கு மேல் வீணடிக்கப்பட்டது.
கட்டடத் துவக்க விழா நடத்தப்பட்டு விட்டதால் முழுமையடையாத கட்டடத்தில் இருந்து 19.3.2010 அன்று சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற வேண்டியதாயிற்று.  அவ்வாறு 19.3.2010 அன்று  சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்ற போது சட்டமன்றத் தரையில் புதிய தரை விரிப்பு தான் போடப்பட்டிருந்தது.

காலரிகள் உள்ள முதல் மாடி முடிக்கப்படாததால் பெரிய திரைச்சீலை ஒன்றினால் சுவர்கள் மறைக்கப்பட்டும், தற்காலிக இருக்கைகள் அமைக்கப்பட்டும் சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது.  சட்டமன்றப் பேரவைத் தலைவர் இருக்கையும் கூட தற்காலிகமாக உயர்த்தப்பட்ட மேடையில் நிறுவப்பட்டது.
ஆனால், அரசு நிருவாகம் திறமையாக செயல்படவேண்டும் என்று நினைப்பவர் யாரும் இவ்வாறு இரண்டு வெவ்வேறு கட்டடங்களிலிருந்து செயல்பட முடியாது.  செம்மையான நிருவாகம் இருந்தால் தான் மக்கள் பணியை சிறப்பாக செய்ய முடியும் என்பதால் தான், புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்ட ஆறு துறைகளையும் எஞ்சிய 30 துறைகள் செயல்பட்டு கொண்டிருக்கும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு நான் மாற்றியுள்ளேன்.  நிருவாக வசதிக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவில் அரசியல் காரணம் எங்கிருந்து வந்தது?

மேலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையின் மத்தியப் பகுதியில் உள்ள அண்ணா சாலையில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் மேம்பாலங்கள் கட்டப்பட்டால் தான் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கலாம் என்பதை முந்தைய அரசே உணர்ந்திருந்தது.

எனவே தான், அங்கே மேம்பாலங்கள் கட்டப்படும் என 2010-11 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் அறிவிப்புகளிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மேம்பாலங்கள் கட்டப்படவில்லை.  சாலை மேம்பாலம் துவங்கப்படாத நிலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்ட கட்டடப் பகுதியிலுள்ள அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவே இயலாது.
புதிய பிளாக் ஏ கட்டடம் பயன்படுத்தப்படாமல் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டு விடும் என்று தி.மு.க.வினர் அங்கலாய்க்கத் தேவையில்லை. இந்தக் கட்டடம் உரிய முறையில் பயன்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஜனவரி மாதம் முந்தைய தி.மு.க. அரசால் ஆறாம் கட்டமாக கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்ட 10 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் இதுவரை கொள்முதல் செய்யப்படாத சுமார் 7 லட்சத்து 48 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதலுக்கான உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், அதாவது, 10 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் இதுவரை கொள்முதல் செய்யப்படாத சுமார் 7 லட்சத்து 48 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதலுக்கான உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும்;
ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்டு இன்னமும் வழங்கப்படாத 1 லட்சத்து 27 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை, அனாதை இல்லங்கள், அரசு பள்ளிகள், ஊராட்சிகள், அரசு மருத்துவமனைகள், சுகாதார துணை மையங்கள், அங்கன்வாடி மையங்கள் போன்ற அமைப்புகளுக்கு வழங்க இந்த அரசு  உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமச்சீர் பள்ளிக் கல்வி முறையினை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றுமே எதிர்த்ததில்லை. 2010 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறை சட்ட முன் வடிவு, 2010 குறித்து இப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது கொள்கை அளவிலே சமச்சீர் கல்வி முறையை ஏற்றுக் கொள்வதாகத் தான் தெரிவித்தோம். 
சமச்சீர் கல்விக்கு இந்த அரசு எதிராக இருப்பது போல சிலர் தவறாக சித்தரிக்க முயல்வது மக்களை திசை திருப்பும் முயற்சி தான்.  பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் சீரான, செம்மையான கல்வி பெற வேண்டும் என்பதும், தனியார் பள்ளிகளிலே வழங்கப்படும் உயர்தர கல்வி ஏனைய பிரிவினருக்கும் கிடைக்க வேண்டும் என்பதும் தான் எங்கள் கொள்கை இவ்வாறு முதல்வர் ஜெயலிலதா பேசினார்.

தயாநிதி - 2ஜி - தோண்டத் தோண்ட பூதம்!


க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) 2004ஆம் ஆண்டில் மத்திய அரசில் அதிகாரத்துக்கு வந்ததும் திமுகவுக்கு வருவாய் வரும் துறைகளான கப்பல் போக்குவரத்து, தொலைத் தொடர்பு போன்றவற்றை வலியுறுத்திப் பெற்ற கருணாநிதி, அரசியலுக்கும் நாடாளுமன்றத்துக்கும் புதுமுகமான தம் பேரன் தயாநிதியை தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக்கினார். தினகரன் நாளிதழில்,"வெளியிட வேண்டாம்" என்று கருணாநிதி இட்ட கட்டளையையும் மீறி, திமுக அமைச்சர்களுள் "யாருக்குச் செல்வாக்கு அதிகம்?" என்று வெளியான கருத்துக் கணிப்பால் மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் திமுகவினரால் அடித்து நொறுக்கப்பட்டுத் தீவைத்துக் கொளுத்தப்பட்டதில் மூன்று அப்பாவி உயிர்கள் கருகிப் போக, அவர்களின் குடும்பங்கள் உருக்குலைந்து போயின. அப்போது திமுகவுக்குள் ஏற்பட்ட குழப்பத்தில், "தயாநிதியைக் கட்சியை விட்டே தூக்க வேண்டும்" என்றுகூட திமுகவின் உயர்மட்டத்தில் பேசப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டு, தயாநிதி மத்திய அமைச்சரைவியில் இருந்து விலக, அவரின் இடத்துக்கு ஆண்டிமுத்து ராசா வந்தார்.

 தாமிருந்த இடத்தில் மற்றொருவரா; எப்படிச் சகிப்பார் தயாநிதி? தயாநிதிக்குத்தான் தெரியும் இத்துறையில் எப்படியெல்லாம் முறைகேடு செய்ய முடியும் என்று! பதவியேற்ற சூட்டோடு, திமுக தலைமையைக் குஷிப்படுத்த, "தயாநிதி மாறன் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது ரூ. 10,000 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருக்கிறது" எனக் குற்றம் சுமத்தினார் ஆ.ராசா. அவருக்கு - இல்லையில்லை கருணாநிதிக்கு - இல்லையில்லை திமுகவுக்கு எதிராக, "ரூ. 60,000 கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்" எனத் தமிழக மக்களின் வரவேற்பறைக்குக் கொண்டு சென்று அறிமுகப்படுத்தியது, கலாநிதி-தயாநிதி கூட்டணி. ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்தும் ராசாவின் முறைகேடான செயல்கள் குறித்தும் சன் டி.வி.யிலும் தினகரன் நாளிதழிலும் விலாவாரியாகச் செய்தி வெளியிட்டு நாறடித்தது.

ராசாவின் பதவிக் காலத்தில் ஓரிலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் அளவிலான 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு, உச்சநீதிமன்ற உத்தரவால் விசாரணைக்கு வந்தபோது இந்தியாவின் கடைக்கோடி மக்கள்வரை அதைக் கொண்டு சேர்த்த பெருமை, சன் குழுமம் போன்ற காட்சி ஊடகங்களைச் சாரும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் முன்னர் 20/11/2010 ஆம் நாள் எழுதியிருந்த "ஸ்பெக்ட்ரம் ... விடை தெரியா வினாக்கள்" என்ற அலசலில்
பல வினாக்களைத் தொடுத்திருக்கிறோம். கருணாநிதியை, "ஜீவா -கக்கன் -காமராஜர் -கருணாநிதி" என்ற அலசலிலும் விமர்சித்துள்ளோம்.

குடும்பக் கலகத்தால் சன் டிவிக்குப் போட்டியாகப் போர்க்கால அடிப்படையில் அதிரடியாகக் கலைஞர் டிவி தொடங்கப் பட்டது. அதற்கான முதலீடு எங்கிருந்து வந்தது என்ற வினாவுக்கு விடையாகத்தான் இப்போது கனிமொழி திகார் சிறையில் இருக்கிறார்.


 திமுகவுக்கு எதிராகத் தாம் பறித்த குழியில் தாமே விழ நேரிடும் என தயாநிதி எதிர்பார்த்திருக்க மாட்டார். tragedy of tragedy ஆக, "ஸ்பெக்ட்ரம் ஊழல்" என முழக்கிய தயாநிதி மீதே ஸ்பெக்ட்ரம் தொடர்பான அறுநூறுகோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு பூமராங்காகத் திரும்பி வந்து இப்போது தாக்குகின்றது. ஏர்செல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கத் தாமதப்படுத்திய தயாநிதி, அந்நிறுவனம் மலேஷியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்குக் கைமாறியவுடன் ஸ்பெக்ட்ரம் உரிமம் விரைந்து வழங்கப்பட்டதாகவும் அதற்கு விலையாக அந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களால் சன் குழுமத்தின் 'சன்டைரக்ட்' நிறுவனத்தில் அறுநூறு கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஸிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ப்ரஸாந் பூஷன், தயாநிதி மீதுள்ள குற்றசாட்டுகளுக்கு ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி வழக்கொன்றும் தொடுத்துள்ளார்.

"அம்பட்டன் குப்பையைக் கிளறினால் அத்தனையும் மயிர்" என்று கிராமப் பெருசுகள் சொல்வதுபோலவும் "தோண்டத் தோண்ட பூதம்" என்பது போலவும் மேலும் பல புகார்கள் தயாநிதி மீது எழுகின்றன. தயாநிதி தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது சன் டிவி தலைமை அலுவலகத்துக்கு அதாவது அறிவாலயத்துக்கு 323 பி எஸ்என்எல் இணைப்புகள் ரகசியமாகக் கொடுக்கப்பட்டிருந்ததாகவும் அதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சுமார் 440 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது எனவும் புகார் எழுந்துள்ளது.

ஈழத்தில் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டபோது கூட டெல்லிக்குச் செல்ல மனமில்லாத கருணாநிதி, ஆ.ராசாவுக்குத் தொலைத் தொடர்புத் துறையைப் பெற்றுத் தருவதில் குறியாக இருந்து, ஆறுகால்களில் டெல்லி சென்று, அனைத்து வகை மிரட்டல்களையும் ஆயுதங்களாக்கிப் போராடினார். ஆ.ராசாவின் திறமையால் ஸ்பெக்ட்ரம் வெடித்தது. இப்போதும் ஸ்பெக்ட்ரம் தொடர்புக்காகச் சிறையிருக்கும் கனிமொழியைப் பார்ப்பதற்காகவே டெல்லி சென்று வந்தார். கருணாநிதியின் டெல்லிப் பயணங்கள் எல்லாம் ஸ்பெக்ட்ரம் தொடர்பாகவே அமைந்து விட்டன. மொத்தத்தில் கருணாநிதியின் டெல்லிப் படையெடுப்பு, "மலையும் மலை சார்ந்ததும் வயலும் வயல் சார்ந்ததும்" என்பது போல "ஸ்பெக்ட்ரமும் ஸ்பெக்ட்ரம் சார்ந்ததும்" என்றாகிப் போனது அவரது அரசியல் வாழ்வில் கறுப்பு அத்தியாயமே!

ஆ.ராசா மீது ஸ்பெக்ட்ரம் குற்றச்சாட்டு எழுந்த போது, "ராசா குற்றமற்றவர்" என நற்சான்று வழங்கிய கருணாநிதி, ஆபத்துக்குக் கை கொடுக்கும் தம் 'தலித்' ஆயுதத்தைக் கையில் எடுத்தபோது அதன் முனை முறிக்கப்பட்டது. கனிமொழி மீது வழக்கு வந்தபோது, பெண் என்றும் தம் குடும்பத்தின் மீதான பழிவாங்கல் என்றும் கருணாநிதி புலம்பினார். கொஞ்ச காலம் ஊடலாக இருந்து, சன் டிவி இலாபத் தொகையில் தம் பங்காகக் கிடைத்த 100 கோடியைக் கையில் வாங்கிக் கொண்டு, கண்கள் பனிக்க இதயம் இனிக்க மீண்டும் சேர்த்துக் கொண்டதோடு, ஜவுளித் துறை அமைச்சராக்கிய பேரன் தயாநிதியையும் அதே ஸ்பெக்ட்ரம் சுற்றி வளைத்துள்ளது. இப்போது என்ன சொல்லப் போகிறாரோ கருணாநிதி.

வளம் கொழிக்கும் துறைகளுள் ஒன்றான தொலைத் தொடர்புத் துறையில் வெளியே தெரியாமல் கோடிக் கணக்கில் கொள்ளையடிக்கலாம்; அது காமதேனு, கற்பக விருட்சம்; விரும்பிய அளவு கறக்கலாம் என்பதை அறிந்து கொண்டதால்தானோ என்னவோ, அத்துறையைப் பெற அனைத்துக் கட்சிகளும் போட்டியிட்டுள்ளன. காங்கிரஸ் அமைச்சரான சுக்ராம் காலம் முதல் பா ஜ கட்சியைச் சேர்ந்த ஜக்மோகன், பாஜக கூட்டணியில் இருந்த ராம்விலாஸ் பாஸ்வான், பாஜகவைச் சேர்ந்த ப்ரமோத் மஹாஜன், அடுத்து வந்த அருண்ஷோரி என, அத்துறைக்கு அமைச்சராக வந்த யாரும் குற்றச்சாட்டிலிருந்து தப்பவில்லை.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2010, டிசம்பர் 8ஆம் தேதி இப்படிச் சொன்னது:

"இந்தப் பிரச்சனையில் இழப்பு 1 இலட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமன்று. இதைவிட அதிகமாகவும் இருக்கக் கூடும். விசாரணையின் தொடக்கத்திலேயே நாங்கள் தீர்ப்பளிக்க விரும்பவில்லை. ஆனால் 2001ஆம் ஆண்டு நடைபெற்றவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். சிபிஐதான் இதுகுறித்து விசாரணை செய்து உண்மையைக் கண்டு பிடிக்க வேண்டும்."