16/05/2011

இலவச மிக்சி வழங்கும் திட்டம்: ஜெ. முதல் கையெழுத்திடுகிறார்

தமிழக முதல்வராக ஜெயலலிதா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
அவர் முதல்வர் பதவியேற்றுக் கொண்டதும் முதலில் கையெழுத்திட இருப்பது இலவச மிக்சி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆகும்.
அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் இலவச மிக்சி, மின்விசிறி என பல அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இவற்றில் முதலில் இலவச மிக்சி வழங்கும் திட்டத்திற்கு முதல்வர் இன்று கையெழுத்திடுகிறார்.
தேர்தல் வெற்றிக்கு பின்னர் பேட்டியளித்த ஜெயலலிதா,  தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் 18 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக விலக முடிவு

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறி தேநீர் விருந்துக்கு வருமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்ததால் பெரும் அதிருப்தி அடைந்துள்ளது திமுக.
மத்திய அமைச்சரவையிலிருந்து விலகி வெளியிலிருந்து ஆதரவு தருவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் குணம் உலகம் அறிந்த ஒன்று தான். இருப்பினும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக பெரும் வெற்றியையு்ம், திமுக பெரும் தோல்வியையும் சந்தித்ததைத் தொடர்ந்து அப்ப்டியே மாறியது காங்கிரஸ்.

திமுகவின் தோல்விக்கு காங்கிரஸும் ஒரு காரணம் என்பதை வசதியாக மறந்து விட்ட அந்தக் கட்சி, அவசரம் அவசரமாக ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறியது. மேலும் சோனியா காந்தியோ, ஜெயலலிதாவுடன் 2 முறை தொலைபேசியில் பேசி வாழ்த்து கூறினார். தேநீர் விருந்துக்கும் வருமாறு அழைப்பும் விடுத்தார். இதுகுறித்து ஜெயந்தி நடராஜனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது இன்னும் திமுக எங்களது கூட்டணிக் கட்சி தான். ஜெயலலிதாவுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்ததும், வாழ்த்து கூறியதும் ஜனநாயக நடைமுறை தான் என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் இந்த செயலால் திமுக கடும் அதிருப்தி அடைந்துள்ளது. மேலும், மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மு.க.அழகிரி உள்ளிட்ட திமுக அமைச்சர்களும் இனிமேல் டெல்லிக்கு சென்று என்ன பயன் என்று கூறி வருவதாக தெரிகிறது. இதையடுத்து மத்திய அமைச்சரவையிலிருந்து மட்டும் வெளியேறி வெளியிலிருந்து ஆதரவு தரும் முடிவை எடுப்பது குறித்து திமுக சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
அதேசமயம், கூட்டணியை விட்டு வெளியேறாது திமுக என்று தெரிகிறது. குறிப்பாக கனிமொழி விவகாரத்தில் ஒரு முடிவு தெரியும் வரை காங்கிரஸுடனான கூட்டணியை திமுக தானாக முறிக்காது என்றும் கூறப்படுகிறது. தேர்தல் முடிவால் சோர்ந்து போய் வீட்டோடு முடங்கியுள்ள கருணாநிதியை, திமுக முன்னணித் தலைவர்கள் கடந்த 2 நாட்களாக சந்தித்துப் பேசி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் போக்கு குறித்து அவர்கள் கருணாநிதியிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர். வேண்டும் என்றே திமுகவை சீண்டுவது போல காங்கிரஸ் நடப்பதாக மூத்த தலைவர்கள் கருணாநிதியிடம் கூறியதாக தெரிகிறது. இருப்பினும் தற்போது ஆட்சி அதிகாரம் கையில் இல்லாத நிலையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் கருணாநிதி வீடு வரை வந்து விட்ட நிலையில் அவசரப்பட்டு முடிவெடுக்க திமுக தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. எனவே அமைச்சரவையிலிருந்து மட்டும் விலகிக் கொண்டு, வெளியிலிருந்து ஆதரவு தருவதாக அறிவிக்கலாமா என்பது குறித்து திமுக தரப்பு யோசித்து வருவதாக தெரிகிறது.

தற்போது மத்திய அமைச்சரவையில் அழகிரி உள்பட 6 அமைச்சர்கள் திமுகவுக்கு உள்ளனர். மேலும் 2014 ல் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலுக்குள் கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம், அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கருணாநிதி, கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக தரப்பில் கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங், ஜெயலலிதாவை வாழ்த்துவது என்பது வேறு, சோனியா காந்தி வாழ்த்து கூறுவது என்பது வேறு.

சோனியாவுக்கும், ஜெயலலிதாவுக்கும் எப்போதும் நல்லுறவு இருந்ததில்லை. மேலும் திமுகவின் பரம விரோதி அதிமுக என்பது சோனியா காந்திக்குகத் தெரியாததல்ல. திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் அதிமுக தலைவரை அவர் வாழ்த்துவது என்பது முக்கியமான ஒரு விடயம்.

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராகி விட்டதாகவே தலைவர் கருதுகிறார். அவரது கருத்தே எங்களது கருத்தும். 2014 லோக்சபா தேர்தலை இணைந்து சந்திக்க காங்கிரஸும், அதிமுகவும் முடிவு செய்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம் என்றனர்.

ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிந்த ஜெயலலிதா, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்!

தமிழகத்தின் புதிய முதல்வராக, ஜெயலலிதா இன்று நண்பகல் பதவியேற்றார்.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில், பிற்பகல் 12.45 மணியளவில் ஆரம்பமான பதவியேற்பு விழாவில், ஜெயலலிதாவுக்கு ஆளுனர் பர்னாலா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். இதன் போது முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா தனது உறுதிமொழியில் இவ்வாறு தெரிவித்தார் :

ஜே.ஜெயலலிதா எனும் நான் சட்டப்படி அமைக்கப்பெற்ற இந்திய அரசியல் அமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும், மாறா பற்றையும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும் ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும், தமிழ்நாட்டு அமைச்சின் முதலமைச்சராக உண்மையாகவும், உளச்சான்றின் படியும் எனது கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும், அரசியலமைப்புக்கும், சட்டத்திற்கும் இணங்க அச்சமும், ஒரு தலை சார்பு இன்றி, விருப்பு, வெறுப்பை விலக்கி பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானவற்றை செய்வேன் என்றும், ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகின்றேன் என்றார்.

தமிழ்நாட்டு முதலமைச்சர் என்ற முறையில், எனது கவனத்திற்கு உள்ளாவதும், தெரியவருவதுமான எந்த பொருளையும், முதலமைச்சரின் கடமைகளை உரியவாறு நிறைவேற்ற தேவையான அளவு கண்டு, ஒருவரிடமோ, பலரிடமோ நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ அறிவிக்கவோ, வெளிப்படுத்தவோ மாட்டேன் என ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகின்றேன்  என தெரிவித்தார்.


 அவரைத்தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர். முதல்வர் பதவியை ஏற்றதும் புனித ஜார்ஜ் கோட்டைக்குச் செல்கிறார் ஜெயலலிதா. அங்கு முதல் கையெழுத்திடுகிறார். அவர் முதலில் உத்தரவிடப்போகும் திட்டம் எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.