25/05/2011

BSNL இண்டர்நெட் அதிரடி விலை குறைப்பு

BSNL நிறுவனம் இண்டர்நெட் சேவைகளுக்கான விலையை அதிரடியாகக் குறைத்துள்ளது. 3.6MBPS மற்றும் 7.6 MBPS டேட்டா கார்டு விலைகள் மே 20 ஆம் தேதி முதல் குறைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து BSNL துணை பொது மேலாளர் M.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

3G யு.எஸ்.பி. போர்ட் ஹச்.எஸ்.டீ.பி. டேட்டா கார்டு 3.6 எம்.பீ.பி.எஸ் (சிங்கிள் பேண்ட்) ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.1600 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 4% வாட் வரிகள் தனி.

3G யு.எஸ்.பி. போர்ட் ஹச்.எஸ்.டீ.பி. டேட்டா போர்டு 7.2 எம்.பீ.பி.எஸ். (ட்ரை பேண்ட்) ரூ.2,500 இலிருந்து ரூ.2 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 4% வாட் வரிகள் தனி..

ஈ.வி.டி.ஒ. கார்டு விலை ரூ.2500-லிருந்து அதிகபட்ச சில்லரை விலையாக ரூ.1,499 க்குக் குறைக்கப்பட்டுள்ளது"

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைக்கவசம் (ஹெல்மெட்) இல்லாவிட்டால் பெட்ரோல் கிடையாது!

இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் தரக்கூடாது என மத்திய பிரதேச மாநிலம் போபால் மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
போபாலிலுள்ள அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கும் இந்த உத்தரவு நகல் அனுப்பப்பட்டுள்ளதாக போபால் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகஙனங்களுக்கு பெட்ரோல் போடும்போது பிடிபடுபவர்களுக்கு ரூ.50 அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு எதிராக பெட்ரோல் பங்குகளில் தகராறு செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என போபால் மாநகர நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெட்ரோல் பங்குகளில் தகராறு செய்யும் எண்ணத்துடன் கூட்டம் கூடுவதைத் தடுக்கும் வகையில், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போபால் மாவட்ட ஆட்சியர் மனோஜ் வத்சவா இதுகுறித்து கூறுகையில், "கடந்த மே-10ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. உத்தரவை மீறிய 45,000 பேரிடம் இதுவரை ரூ.20 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது" என்றார்.

ஹெல்மெட் அணியாமல் மோட்டார்சைக்கிளில் வரும் மாணவர்களைக் கல்லூரிக்குள் அனுமதிக்க கூடாது என அம்மாநில உயர்கல்வி துறை இதற்கு முன் அனைத்து கல்லூரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியாவில் இரத்ததான முகாம்

சவுதி அரேபியாவில் வாழும் தமிழ் பேசும் மக்கள் சார்பாக அதன் தலைநகர் ரியாதில் இம்மாதம் 27 ம் தேதியன்று இரத்த தான முகாம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற தமிழக இஸ்லாமிய அமைப்பின் ரியாத் கிளை நடத்தும் இந்த முகாம், ரியாத் மாநகரின் மிகப்பெரும் மருத்துவமனையான கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் நடைபெறவுள்ளது.
மே மாதம் 27ம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 9.30 மணிக்குத் துவங்கும் இம்முகாம் மாலை 4.45 மணி வரை நடைபெறும். இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மணடல இரத்ததான ஒருங்கிணைப்பாளர் ஃபெய்ஸல் கூறியதாவது:

"இரத்த தானம் வழங்குபவர்களுக்கு வசதியாக ரியாதின் பல பகுதிகளிலிருந்து கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டிக்கு இலவசமாக வாகன வசதிகள் ஏற்பாடு செயயப்பட்டுள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் நடத்தும் 11 வது இரத்ததான முகாமான இதில் சுமார் 300 பேர் இரத்தக் கொடையளிக்க இருக்கின்றனர். இரத்ததானம் வழங்குவதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் சவுதி அரேபியாவில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது." என்று கூறினார்.

இந்த இரத்த தான முகாம் தொடர்பான விவரங்களைக் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு பெறலாம்:

ஃபெய்ஸல் : 0507809247, மாஹீன் : 0542540860