03/04/2011

கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத வீரர்கள்

மும்பை: உலகக் கோப்பையை 2வது முறையாக வென்ற மகிழ்ச்சியிலும், சந்தோஷத்திலும் இந்திய வீரர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்

மகா உற்சாகத்துடன் தனது உலகக் கோப்பையை முடித்துள்ளது இந்தியா. கடைசிப் பந்தில் சிக்சர் அடித்து இந்தியாவை அட்டகாசமான வெற்றிக்கு இட்டுச் சென்றார் டோணி. அவர் சிக்சரை அடித்து போட்டியை முடித்து வைத்தபோது இந்திய வீரர்கள் உற்சாகத்தின் உச்சிக்கே போய் விட்டனர். மைதானத்திற்குள் ஓடி வந்த அவர்கள் டோணியையும், அவருக்குத் துணையாக ஆடிய யுவராஜ் சிங்கையும் கட்டிப் பிடித்து கொண்டாடினர்.
யுவராஜ் சிங்கோ உற்சாகத்தில் கண்ணீர் விட்டு அழுதார். அதேபோல ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்களும் ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதனர்.

பூரிப்பில் கேரி கிர்ஸ்டன்

இந்திய கிரிக்கெட் அணியை ஒட்டுமொத்தமாக மாற்றிய பெருமைக்குரிய பயிற்சியாளர் போட்டியின் முடிவில் பெரும் உற்சாகத்துடன் வீரர்களைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

வழக்கமாக அதிகம் சிரிக்காத அவர் இன்று முகம் மலர பெரும் உற்சாகத்துடன், புன்னகையுடன் காணப்பட்டார்.

ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சச்சின்-கிர்ஸ்டன்

இந்த உலகக் கோப்பைப் போட்டிதான் அனேகமாக சச்சினுக்கு கடைசிப் போட்டி என்பதால், அவரை வீரர்கள் தோளில் தூக்கிக் கொண்டு மைதானத்தை சுற்றி வந்து மகிழ்ந்தனர்.

அதே மரியாதையை பயிற்சியாளர் கிர்ஸ்டனுக்கும் வீரர்கள் கொடுத்தனர். விராத்கோலியும், சுரேஷ் ரெய்னாவும் கிர்ஸ்டனை தோளில் தூக்கிக் கொண்டு போனது வெட்கத்திலும், மகிழ்ச்சியிலும் நெளிந்தார், நெகிழ்ந்தார் கிர்ஸ்டன்.

டோணி போட்ட தப்புக் கணக்கு-ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது!

மும்பை: 7 பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தியும், இலங்கையின் ரன் குவிப்பை தடுக்க முடியாமல் போய் விட்டது இந்தியாவால். அதிலும், ஸ்ரீசாந்த் ரன் வள்ளலாக மாறி ரன்களை தாறுமாறாக வாரிக் கொடுத்து விட்டார்.

பாகிஸ்தானை அதிர வைத்த ஆசிஷ் நெஹ்ரா காயமடைந்ததால் அவர் இன்றைய போட்டியில் ஆடவில்லை. அதற்குப் பதிலாக அஸ்வின் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேகப் பந்து வீச்சாளராக இருக்கட்டும் என்று ஸ்ரீசாந்த்தை சேர்த்தார் டோணி.
ஆனால் டோணியின் கணக்கு தப்புக் கணக்காகி விட்டது. வெறும் 8 ஓவர்களை மட்டுமே போட்ட ஸ்ரீசாந்த் 52 ரன்களை வாரிக் கொடுத்து விட்டார்.

அதேபோல ஜாகிர்கானும் ரன்களை வாரி வழங்கினார். 10 ஓவர்கள் போட்ட அவர் 3 மெய்டன் போட்டு 60 ரன்களைக் கொடுத்தார். இருப்பினும் 2 விக்கெட்களை எடுத்தார்.

மற்ற பந்து வீச்சாளர்களில் ஹர்பஜன் சிங் 10 ஓவர்கள் போட்டு 50 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.

யுவராஜ் சிங்கின் பந்து வீச்சு பரவாயில்லை. 10 ஓவர்களைப் போட்ட அவர் 49 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களைச் சாய்த்தார்.

இன்றைய போட்டியில் கடைசி நேரத்தில்தான் இலங்கை ரன்களைக் குவித்து விட்டது. இந்த இடத்தில்தான் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீச வேண்டியது அவசியம். ஆனால் அந்த சமயத்தில்தான் இந்திய பந்து வீச்சாளர்கள் பந்துகளை தாறுமாறாக போட்டனர்.
ஜாகிர்கான், ஸ்ரீசாந்த், முனாப் படேல், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், சச்சின் விராத் கோலி என 7 பேர் பந்து வீசியும், இலங்கையின் ரன் குவிப்பைத் தடுக்க முடியாமல் போய், இந்தியாவின் ஓட்டைப் பந்து வீச்சு மீண்டும் ஒருமுறை பல்லைக் காட்டி விட்டது.

டோணி தலைமையில் புதிய வரலாறு படைத்தது இந்தியா-2வது உலகக் கோப்பையை வென்றது

மும்பை: கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா அபாரமாக வென்றுள்ளது. மகேந்திர சிங் டோணி தலைமையிலான இந்திய அணி, இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் அடித்துத் துவைத்து வெற்றி பெற்று தனது 2வது உலகக் கோப்பையை வென்றது.

இதுவரை கபில்தேவ் வசம் மட்டுமே இருந்து வந்த உலகக் கோப்பைப் பெருமையில் டோணி தலைமையிலான வீரர்கள் இணைந்துள்ளனர்.
28 ஆண்டு கால உலகக் கோப்பைக் கனவையும் டோணி தலைமையிலான இந்திய அணி நிறைவேற்றி உலகெங்கும் உள்ள இந்தியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

2வது முறையாக இந்தியா உலகக் கோப்பையை வென்றதை நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

மிகப் பிரமாதமான சேஸிங்கில் ஈடுபட்ட இந்தியாவுக்கு சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர ஷேவாக் இன்று ஏமாற்றமளித்தனர். அதிரடியாக ஆரம்பித்த சச்சின் 18 ரன்களில் ஆட்டமிழந்தபோது மும்பை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் இந்த இழப்பை ஈடுகட்டி விட்டார் கெளதம் கம்பீர். அபாரமாக ஆடிய அவர் மிகுந்த மன வலிமையுடன் பொறுப்பை உணர்ந்து சீராகவும், சிறப்பாகவும் ஆடினார். அவரும் கேப்டன் டோணியும் இணைந்து மிகச் சிறப்பான கட்டத்திற்கு இந்திய அணியை இட்டுச் சென்றனர்.

விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து இருவரும் அணியை வெற்றி இலக்குக்கு அருகில் கொண்டு சென்று விட்டனர்.

கம்பீரின் ஆட்டம் இன்று வெகு சிறப்பாக இருந்தது. சரியான பந்துகளை பவுண்டரிகளுக்கு அனுப்பி இலங்கைப் பந்து வீச்சை நொறுக்கித் தள்ளினார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 97 ரன்களில் இருந்தபோது துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார் கம்பீர். 122 பந்துகளில் 97 ரன்களை எடுத்தார் கம்பீர்.

இருப்பினும் மறு முனையில் கேப்டன் டோணி தனது சிறப்பான ஆட்டத்தால் இந்தியாவை வெற்றிக்கு இட்டுச் சென்று புதிய வரலாறு படைத்தார்.

3வது முயற்சியில் 2வது கோப்பை

இந்தியா உலகக் கோப்பையை கடந்த 1983ம் ஆண்டு முதல் முறையாக வென்றது. கபில் தேவ் தலைமையிலான அந்த அணியின் பந்து வீச்சாளளர்கள் இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தனர்.

அதன் பின்னர் 2003ம் ஆண்டு 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியது. இருப்பினும் அப்போது பந்து வீச்சாளர்களும், பேட்ஸ்மென்களும் சொதப்பியதால் இந்தியா படு தோல்வியுடன் கோப்பைக் கனவைத் தகர்த்துக் கொண்டு தாயகம் திரும்பியது.

2011 உலக்க கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம் 3வது முறையாக இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா. இந்த முறை பேட்ஸ்மேன்கள் மூலம் இந்தியாவுக்கு பிரமாதமான வெற்றி கிடைத்துள்ளது.
3 முறை உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இந்தியா, தனது 3வது முயற்சியில் 2வது உலகக் கோப்பையை வென்றெடுத்துள்ளது.

டோணிக்கு 2வது உலகக் கோப்பை

கேப்டன் டோணிக்கு இந்த உலகக் கோப்பை மிகவும் விசேஷமானதாக அமைந்துள்ளது. இதற்கு முன்பு அவர் முதல் முறையாக நடைபெற்ற டுவென்டி 20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தார்.

தற்போது ஒரு நாள் போட்டிக்கான உலகக் கோப்பையையும் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டன்கள் வரிசையில் இதன் மூலம் அவர் முன்னணிக்கும் உயர்ந்து, யாரும் எட்ட முடியாத உயரத்தை எட்டிப் பிடித்து விட்டார்.

சச்சின் கனவு நனவானது

சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கருக்கு இந்த உலகக் கோப்பை பெருமைக்குரியதாக இருந்தாலும் கூட, அவர் சரியாக விளையாடாத நிலையில் இந்த உலகக் கோப்பை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முந்தைய உலகக் கோப்பைப் போட்டித் தொடர்களில் அவர் சிறப்பாக விளையாடியும் கூட இந்தியாவால் கோப்பையை வெல்ல முடியாத நிலை இருந்தது.

22 வருடமாக கிரிக்கெட் விளையாடி வரும் சச்சின் தனது ஆட்டத்தின் கிட்டத்தட்ட கடைசிக் கட்டத்தில் கோப்பையை தொட்டிருப்பது நிச்சயம் அவருக்கு சந்தோஷமானதாகவே இருக்கும். இருப்பினும், இன்றைய இறுதிப் போட்டியில் அவரால் பெரிய ஸ்கோரை எட்ட முடியாதது கோடானு கோடி ரசிகர்களைப் போலவே அவருக்கும் பெரிய ஏமாற்றமாகவே இருக்கும்.

டோணி ஆட்ட நாயகன்

79 பந்துகளில் 91 ரன்களைக் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு உதவிய கேப்டன் மகேந்திர சிங் டோணி ஆட்ட நயாகன் விருதைப் பெற்றார்.

யுவராஜ் சிங் தொடர் நாயகன்

உலகக் கோப்பை போட்டித் தொடர் முழுவதும் பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் பிரமாதமாக தனது திறமையை வெளிப்படுத்திய, நெருக்கடி நேரத்தில் இந்தியாவுக்கு பெரும் உதவியாக இருந்த யுவராஜ் சிங் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டார்.

போட்டித் தொடரில் மொத்தம் 4 மேன் ஆப் தி மேட்ச் விருதைப் பெற்றவர் யுவராஜ் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்களைக் குவித்தது.

மஹேளா ஜெயவர்த்தனே சதம் அடித்தார். ஆரம்பத்தில் ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் சிறப்பான பந்து வீச்சில் ஆரம்பத்தில் திக்கித் திணறி ஆடிய இலங்கை, பின்னர் சங்கக்கரா, ஜெயவர்தன உதவியுடன் மிகப் பெரிய ஸ்கோரை எட்டியது. ரன்களை எடுப்பதை விட, விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர் இலங்கை வீரர்கள். இதனால், இறுதி ஓவர்களில் பவுண்டரி மழை பொழிந்தனர்.

200 ரன்களைத் தாண்டியதும் அடித்து ஆட ஆரம்பித்தனர் இலங்கை வீரர்கள்.

இந்தப் போட்டியில் நிதானமாகவும் உறுதியுடனும் நேரம் வாய்த்த போது அடித்தும் சிறப்பாக ஆடிய ஜெயவர்தன, 85 பந்துகளில் சதம் அடித்தார். இது அவருக்கு 14வது சதம். இந்திய பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்திலிருந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இலங்கையின் ஸ்கோரை, 250 தாண்ட உதவியது இவரது சதம்தான்.

இந்திய பந்து வீச்சாளர்களில் ஜாகீர்கான் 60 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆரம்பத்தில் இவர் தொடர்ந்து 3 மெய்டன் ஓவர்களை வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. யுவராஜ் சிங் 10 ஓவர்களில் 49 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். ஹர்பஜன் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

ஆரம்பத்தில் சிறப்பான பந்து வீச்சு, பீல்டிங் என அசத்திய இந்திய அணி, கடைசி ஓவர்களில் அசட்டையாக இருந்துவிட்டதால், இலங்கை பெரிய ஸ்கோரை எட்டிவிட்டது.

கோப்பையை வழங்கினார் பவார்

ஆட்ட நாயகன், போட்டித் தொடர் நாயகன் விருதுகள் வழங்கப்பட்ட பின்னர் உலகக் கோப்பையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் சரத் பவார், இந்திய அணியின் கேப்டன் டோணியிடம் வழங்கினார்.



இந்தியா த்ரில்லிங் வெற்றி, கோப்பையை வென்றது!

இந்தியா இலங்கை அணிகளுக்கிடையே மும்பை மைதானத்தில் இன்று நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையைத் தோற்கடித்து கோப்பையை வென்றது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளிடையே கோப்பை யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் இறுதி போட்டி இன்று நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று ஆரம்பத்தில் பேட்டிங் தேர்வு செய்யும் அணியே வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், டாஸ் போட இரு அணி கேப்டன்களும் மைதானத்துக்கு வந்தனர்.
இந்திய அணி கேப்டன் டோனி ரசிகர்களின் பலத்த கரகோசத்துக்கிடையே டாஸை வீசினார். ஹெட் விழுந்தது. ரவி சாஸ்திரி இந்திய கேப்டன் டோனி டாஸ் வென்றதாக அறிவித்த வேளையில், இலங்கை அணி கேப்டன் சங்ககரா தான் டாஸ் வீசிய வேளையில் ஹெட் அல்லது டைல் என எதுவுமே கூறவில்லை என்று கூறி குழப்பினார்.
இதனால் குழப்பம் ஏற்பட்ட நிலையில், நடுவர் மீண்டும் டாஸ் வீசப்பணித்தார். இரண்டாவது டாஸ் வீசியதில் இலங்கை அணி கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
இலங்கை அணியின் துவக்கத்தை இந்திய அணி ஆரம்ப பந்து வீச்சாளர்கள் தகர்த்தனர். ஆரம்ப ஸ்பெல்லில் பந்து வீசிய ஜகீர்கான், 5 ஓவர்கள் பந்துவீசி 3 மெய்டன் ஓவர்களுடன் 6 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். அந்த அணியின் தடுமாற்றத்தை அவ்வணியின் கேப்டனும் துணை கேப்டனும் தடுப்பாட்டம் ஆடி நிமிர்த்தினர்.
இந்திய அணியில் இன்றைய ஆட்டத்துக்குச் சேர்க்கப்பட்டிருந்த ஸ்ரீசாந்தின் பந்து வீச்சு படு மோசமாக இருந்தது. அவர் 8 ஓவர்கள் பந்துவீசி 52 ரன்களை வாரி வழங்கினார். யுவராஜ் சிங் மற்றும் படேலின் பந்து வீச்சு குறிப்பிடத்தகும்படி இருந்தது. இந்திய அணியின் இறுதி ஓவர்களில் இலங்கை அணி அடித்து விளாசியது. இறுதி 5 ஓவர்களில் 53 ரன்களை அந்த அணி எடுத்தது. முதல் ஸ்பெல்லில் நன்றாக பந்து வீசிய ஜகீர்கானின் இறுதி ஸ்பெல்லில் அந்த அணி 54 ரன்களை அடித்து குவித்தது. இறுதியில் அவ்வணி 50 ஓவர்களில் 274 ரன்களை எடுத்தது.
வெற்றிபெற 275 என்ற சற்று கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்கத்திலேயே ஷேவாக் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்பட்ட டெண்டுல்கரும் வெறும் 18 ரன்னுடன் நடையைக் கட்டியதோடு மைதானத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. பின்னர் கவுதம் கம்பீரும் கோஹ்லியும் அணியைச் சற்று தூக்கி நிறுத்தினர். பின்னர் கம்பீருடன் டோனி அணி சேர்ந்தார். இருவரும் மிக அபாரமாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கம்பீர் எதிர்பாராதவிதமாக 94 ரன்களில் செஞ்சுரியை நழுவவிட்டார். பின்னர் டோனியுடன் சேர்ந்த யுவராஜ் சிங் ஜோடி அணியை வெற்றிபெற வைத்தது.
இறுதியில் 9 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது. 91 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் டோனி ஆட்டநாயகனாகவும் உலக கோப்பை போட்டிகளில் 4 ஆட்டநாயகன் விருதுகள் பெற்று மிக அபாரமாக தன் திறமையை வெளிப்படுத்திய யுவராஜ் சிங் தொடர் ஆட்ட நாயகனாகவும் தேர்வு பெற்றனர்.
இறுதியில் இந்தியா உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.