17/10/2011

2வது கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது

சென்னை: தமிழகத்தில் 2வது கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்வடைகிறது. இதையடுத்து தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அரசியல் கட்சியினர் இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் முதல் கட்டமாக 10 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள் மற்றும் 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று முதல் கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது.

இதையடுத்து 19ம் தேதி 2வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதில் 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப் பதிவு நடைபெறும்.

இதற்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் இறுதிக் கட்ட பிராசரத்தை முடுக்கி விட்டுள்ளனர். மோட்டார் சைக்கிள்களில் வேட்பாளர்களுடன் ஊர்வலங்களை நடத்துவது, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பது என அரசியல் கட்சியினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையே இன்று 2வது ஒருநாள் போட்டி

டெல்லி: இந்தியா- இங்கிலாந்து அணிகள் சந்திக்கும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இன்று டெல்லியில் நடக்கிறது. முதல் போட்டியில் அபாரமாக வென்றுள்ளதால், 2வது போட்டியை நம்பிக்கையுடன் சந்திக்கிறது இந்தியா.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி இங்கு ஒருநாள், டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதில் 2 அணிகளுக்கு இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 126 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் டெல்லி மைதானத்தில் இன்று 2 அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி நடக்க உள்ளது. 2 அணிகளிலும் வீரர்களில் யாரும் மாற்றம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதை குறித்து இந்திய கேப்டன் டோணி கூறுகையில், முதல் ஒருநாள் போட்டியில் எதிர்பார்த்ததை விட சிறப்பாக விளையாடி, இங்கிலாந்து அணியை வீழ்த்தினோம். அதேபோல வரும் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுவோம், என்றார்.

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் குக் கூறுகையில், முதல் போட்டியில் இங்கிலாந்து அணியின் தரப்பில் பேட்டிங், பீல்டிங், பவுலிங் என அனைத்து துறையிலும் மிக குறைந்த திறனையே வெளிப்படுத்தினோம். இதனால் இந்தியா அணி எளிதாக வெற்றி பெற்றது. இந்த தோல்வியில் துவழ்ந்து போகவில்லை. 2வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறும், என்றார்.

ஓட்டுப் போட சென்னையிலிருந்து கிளம்பியவர்கள் பஸ் கிடைக்காமல் கோயம்பேட்டில் தவிப்பு

சென்னை: உள்ளாட்சித் தேர்லில் ஓட்டுப் போடுவதற்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குக் கிளம்பியவர்கள் பஸ்கள் கிடைக்காததால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், திருப்பத்தூர், ஆரணி, ஆற்காடு, செய்யாறு, காஞ்சிபுரம், திருத்தணி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட இடங்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இன்று உள்ளாட்சித் தேர்தல் என்பதாலும், விடுமுறை என்பதாலும் சென்னையில் பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது ஊர்களுக்குச் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தனர்.

இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நள்ளிரவு நேரத்திலும் கூட்டம் அலைமோதியது.

ஆனால் பத்து மணிக்கு மேல் பேருந்துகளின் எண்ணிக்கை திடீரென குறைந்து விட்டது. இதனால் ஊருக்கு் செல்ல வேண்டியவர்கள் பேருந்து கிடைக்காமல் தவிப்புக்குள்ளாகினர். இதையடுத்து கோபமடைந்த அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு ஊர்களுக்குக் கிளம்பவிருந்த 300 பேருந்துகளை போக விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். அதன் பின்னர் மக்கள் அமைதியடைந்தனர். காலையி்ல மீண்டும் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்பட்டது. அதில் ஏறி பலர் ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.