29/05/2011

எம்.எல்.ஏ.வாக கருணாநிதி நாளை பதவி ஏற்கிறார்

தமிழக சட்டசபையில் கடந்த 23ந் திகதி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பதவி ஏற்றனர்.

திருவாருர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க. தலைவர் கருணாநிதி அன்றைய தினம் டெல்லியில் கனிமொழி எம்.பி.யை பார்க்க சென்றதால் அவரும் துரைமுருகனும் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கவில்லை.
அமைச்சர் மரியம்பிச்சை விபத்தில் இறந்ததால் அமைச்சர் சிவபதி, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. மனோகரன் ஆகியோர் திருச்சிக்கு சென்று விட்டனர். இதனால் அவர்களும் அன்றைய தினம் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்கவில்லை.

கடந்த 27ந் திகதி தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசன் முன்னிலையில் சிவபதி, மனோகரன் இருவரும் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றனர். இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும், முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் நாளை எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்கிறார்கள்.
சபாநாயகர் அறையில் சபாநாயகர் ஜெயக்குமார் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

ஐபிஎல் சாம்பியனாக மீண்டும் முடிசூடியது சென்னை சூப்பர் கிங்ஸ்

2011 இன் ஐபிஎல் இறுதிப்போட்டியில் பெங்களூரை வீழ்த்தி, டோனி தலைமையிலான சென்னை அணி மீண்டும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.
மாபெரும் சென்னை கிரிக்கெட் ரசிகர் பட்டாளத்தின் ஆதரவுடன் சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 205 ஓட்டங்களை எடுத்தது.

முரளி விஜய் அதிரடியாக விளையாடி 6 சிக்ஸர்கள், 4 பவுன்றிகள் உள்ளடங்களாக 52 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார். மைக் ஹஸி 3 பவுன்றிகள், 3 சிக்ஸர்கள் 45 பந்துகளில் 63 ரன்களை எடுத்தார்.

பந்து வீச்சில் அர்விந்த், கேய்ல், தலா இரண்டு விக்கெட்டினை வீழ்த்தினர்.

பதிலுக்கு களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 147 ரன்களையே எடுத்தது. அதிகபட்சமாக திவாரி 42 ரன்களையும் கோலி 35 ரன்களையும் எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிரிஸ் கேய்ல் எந்தவித ஓட்டமும் எடுக்காத நிலையில் அஷ்வினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
 அஷ்வின் 4 ஓவர்களில் 16 ரன்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ஜகதி 4 ஓவர்கள் பந்துவீசி 21 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். பாலிங்கர், ரைனா, பிராவோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
 இப்போட்டியில் பெங்களூரை வீழ்த்தியதன் மூலம் 2011 இன் ஐபிஎல் சாம்பியனாக சென்னை முடிசூடியுள்ளது. கடந்த வருடமும் தோனி தலைமையிலான சென்னை அணி ஐபிஎல் சாம்பியனாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் இறுதிப்போட்டி : வெற்றி கொண்டாட்டங்கள் (படங்கள்)

2011 இன் ஐபிஎல் இறுதிப்போட்டியில் பெங்களூரை வீழ்த்தி, டோனி தலைமையிலான சென்னை அணி மீண்டும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.வெற்றிக்கொண்டாட்ட படங்கள் இதோ!

இறுதிப்போட்டியின் சிக்ஸர் மழை பொழிந்த சென்னை : முதல் இன்னிங்ஸ் 205/05

சென்னை : பெங்களூர் அணிகளுக்கு இடையில் சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்று வரும் ஐபிஎல் 2011 இன் இறுதி போட்டியில் முதல் இன்னிங்ஸில் சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 205 ரன்களை எடுத்துள்ளது.
அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் முரளி விஜய், மைக் ஹஸி இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 159 ரன்களை பகிர்ந்துகொண்டனர். சென்னையின் ஐபிஎல் வரலாற்றில் இரு பெட்ஸ்மென்கள் இணைந்து எடுத்த அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக இது சாதனை படைத்துள்ளது.

முரளி விஜய் 52 பந்துகளில் 95 ரன்களை எடுத்தார். இதில் 4 பவுன்றிகள், 6 சிக்ஸர்கள் அடங்கும். மைக் ஹஸி 45 பந்துகளில் 63 ரன்களை எடுத்தார். இதில் 3 சிக்ஸர்கள், 3 பவுன்றிகள் அடங்கும். டோனி, 13 பந்துகளில் 22 ரன்களை எடுத்தார். எனினும் இறுதி இரண்டு ஓவர்களில், 4 விக்கெட்டுக்களை இழந்த சென்னை அணியின் சார்பில் இறுதியாக களமிறங்கிய பிராவோ, இறுதிப்பந்தில் விளாசிய சிக்ஸர் மூலம் 20 ஓவர்களில் 205 ரன்களை எட்டிப்பிடித்தது சென்னை.