06/05/2011

இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி

இந்தியாவில் அரசியல் பணம் கொழிக்கும் தொழிலாக மாறி வரும் நிலையில், இந்தியாவிலுள்ள 30 முதல்வர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கணக்குக் காட்டப்பட்ட வரை, அதில் நமது தமிழக முதல்வர் கருணாநிதி இரண்டாமவராக ரூ. 44 கோடி சொத்து மதிப்பில் உள்ளார். முதலிடத்தில் உ.பி முதல்வர் மாயாவதி உள்ளார்.

பட்டியல் விபரம்:


1.மாயாவதி (55) - உத்தரபிரதேசம் - ரூ. 87 கோடி
2.மு.கருணாநிதி (86) -  தமிழ்நாடு - ரூ. 44 கோடி
3. டோர்ஜி காண்ட் (56) - அருணாச்சல பிரதேசம் - ரூ. 23 கோடி   (இவரை சில நாள்களாகக் காணவில்லை)
4. பிரகாஷ் சிங் பாதல் (83) - பஞ்சாப் - ரூ. 9.20 கோடி
5. கிரண்குமார் ரெட்டி (50)  - ஆந்திரா - ரூ. 8.11 கோடி
6. நவீன் பட்நாயக் (64)  - ஒரிசா - ரூ. 7.89 கோடி
7. நெய்பியூ ரியோ (60) - நாகலாந்து - ரூ. 7.23 கோடி
8. பிரிதிவிராஜ் சவான் (65) - மராட்டியம் - ரூ. 6.81 கோடி
9. வி.வைத்திலிங்கம் (60) - புதுச்சேரி - ரூ. 5.70 கோடி
10. தருண் ஹோகயி  (75) - அசாம் - ரூ. 4.94 கோடி
11. பவான் சாம்ளிங் (60) - சிக்கிம் - ரூ. 3.82 கோடி
12. பூபிந்தர் சிங் ஹூடா (63) - அரியானா - ரூ. 3.74 கோடி
13. உமர் அப்துல்லா (41) - ஜம்மு காஷ்மீர்  - ரூ. 3.49 கோடி
14. முகுல் சங்மா (46) - மேகாலயா - ரூ. 3.42 கோடி
15. திகாம்பர் காமத் (57)  - கோவா - ரூ. 3.23 கோடி
16. லலித்வாலா (69) - மிசோரம் - ரூ. 2.29 கோடி
17. எடியூரப்பா (68) - கர்நாடகா - ரூ. 2 கோடி
18. நிதிஷ் குமார் (60) - பீகார்  - ரூ. 1.5 கோடி
19. அர்ஜுன் முண்டா (43) - ஜார்கண்ட் - ரூ. 1.33 கோடி
20. சிவராஜ் சவுகான் (52) - மத்திய பிரதேசம் - ரூ. 1.23 கோடி
21. ஷீலா தீட்சித் (73)  - டெல்லி - ரூ. 1.18 கோடி
22. பி.கே.துமால் (67) - இமாச்சல பிரதேசம் - ரூ. 1.18 கோடி
23. அசோக் ஹெலாட் (60) - ராஜஸ்தான் - ரூ. 1.04 கோடி
24. ராமன் சிங் (58) - சத்தீஸ்கர் - ரூ. 1 கோடி
25. புத்ததேவ் பட்டாச்சார்யா (67) - மேற்கு வங்காளம் - ரூ. 46.20 லட்சம்
26. நரேந்திர மோடி (60) - குஜராத் - ரூ. 42.56 லட்சம்
27. ரமேஷ் போக்ரியால் (52) - உத்தரகாண்டம் - ரூ. 37.30 லட்சம்
28. அச்சுதானந்தன் (87) - கேரளா - ரூ. 16.09 லட்சம்
29. மாணிக் சர்கார் (62) - திரிபுரா - ரூ. 8.11 லட்சம்
30. ஒக்ரம் இபாபி சிங் (63) - மணிப்பூர் - ரூ. 6.09 லட்சம்

கனிமொழி கைது? கலைஞர் டிவியின் நம்ப இயலா கணக்குகள்!

2G ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில் மே மாதம் 6 ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள கனிமொழி, அன்றைய தினம் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார் என சிபிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2ஜி அலைவரிசை ஒதுக்கீடு விஷயத்தில் 1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் கலைஞர் டிவி பங்குதாரர்களான கனிமொழி மற்றும் சரத் குமாரும் சினியுக் கரீம் முரானி ஆகியோர் மட்டுமே இதுவரை கைது செய்யப்படவில்லை. மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், வரும் மே மாதம் 6 ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழி ஆஜராக உள்ளார். அப்போது கனிமொழி கைது செய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலைஞர் டிவிக்கு டி.பி ரியாலிட்டியின் இணை நிறுவனம் மூலம் பெறப்பட்ட 214.8 கோடி பண விஷயத்திலும் கலைஞர் டிவி சமர்ப்பித்த கணக்கு வழக்குகளிலும் காணப்படும் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ள சிபிஐ, இதில் பெரிய தில்லு முல்லுகள் நடைபெற்றுள்ளதாக உறுதியுடன் நம்புகிறது.
பிரபல புலனாய்வு வார இதழ் ஒன்றில் வெளி வந்துள்ள தகவல் படி, கலைஞர் டிவி சமர்ப்பித்த வரவு செலவு கணக்கில்,

* கலைஞர் டிவிக்கு டி.பி ரியாலிட்டியின் இணை நிறுவனம் மூலம் 214.8 கோடி ரூபாய் எவ்வித ஆவணங்களும் இன்றி கடன் பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

* மேலும் அது சமர்ப்பித்துள்ள கணக்குப்படி, கலைஞர் டிவியின் ஆண்டு வரவு 63.12 கோடி ரூபாய்; செலவு 61.47 கோடி ரூபாய். ஆக, அரசுக்கு வரி செலுத்தும் முன்னர் நிகர ஆண்டு வருமானம் 1.65 கோடி எனவும் வரி செலுத்தப்பட்ட பின்னர் லாபம் 1.36 கோடி எனவும் கணக்கு சமர்ப்பித்துள்ளது.
* ஆண்டுக்கே நிகர வருமானம் 1.36 கோடியாக இருக்கும் நிலையில் டி.பி ரியாலிட்டி நிறுவனம் கலைஞர் டிவிக்கு 214.8 கோடி ரூபாயை எவ்வித ஆவணங்களும் இன்றி கொடுக்க எப்படி முன்வந்தது என்ற கேள்வியை சிபிஐ எழுப்புகிறது.
இது மட்டுமன்றி,
* கலைஞர் டிவி, கடன் பெற்ற அந்த நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணத்தால் கடன் பெற்ற ஏழு மாதங்களிலேயே 214.8 கோடி ரூபாயை வட்டியுடன் திருப்பி செலுத்தி விட்டதாக சிபிஐயிடம் கலைஞர் டிவி தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆண்டுக்கே நிகர லாபம் 1.36 கோடி என்றிருக்க, கடன் பெற்ற ஏழே மாதத்தில் அவ்வளவு பெரிய தொகையைக் கலைஞர் டிவி வட்டியுடன் எப்படி திருப்பிச் செலுத்தியது? கலைஞர் டிவியின் வருமானத்தில் இவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க முடியாது என்ற நிலையில், வேறு யார் கலைஞர் டிவிக்கு இத்தொகையைக் கடனாக கொடுத்தார்?
மேலும் கலைஞர் டிவி சமர்ப்பித்த வரவு செலவு கணக்கில்,
* கலைஞர் டிவியின் கண்ணுக்குப் புலப்படாத சொத்து 2008-2009 கால அளவில் 123.25 கோடி எனவும் 2009-2010 கால அளவில் அது 159.16 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் டிவியின் ஆண்டு நிகர லாபமே 1.36 கோடியாக இருக்க, அதன் கண்ணுக்குப் புலப்படாத சொத்தின் மதிப்பு மட்டும் ஆண்டுக்கு ஆண்டு பல மடங்கு உயர்ந்தது எப்படி? கண்ணுக்குப் புலப்படாத சொத்தை எப்படி கண்டுபிடித்தார்கள்? என்ற கேள்வியை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கலைஞர் டிவியின் பங்குதாரர் சரத் குமார் ரெட்டியிடம் கேட்டு துளைத்தெடுத்து வருகின்றனர்.
மேலும், ஆண்டுக்கு நிகர லாபம் 1.36 கோடி என்ற நிலையில்  சினியுக் நிறுவனத்திடம் வாங்கிய கடனுக்கு கலைஞர் தொலைகாட்சி 7 மாதங்களுக்கு ரூ 31 கோடி ரூபாய் வட்டி செலுத்தியுள்ளதும் சற்று நெருட வைக்கிறது. ஆண்டுக்கு மொத்த செலவில் பாதிக்கும் மேற்பட்ட செலவு கடனுக்காக செலுத்திய வட்டியாக ஆகிறது!
கலைஞர் டிவியின் பங்குகளில் 20 சதம் கனிமொழி பெயரிலும் 20 சதம் சரத் குமார் ரெட்டியின் பெயரிலும் உள்ளன. ஐந்தில் மூன்று பாகம், கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் பெயரிலேயே உள்ளது. இருப்பினும் வழக்கில் கனிமொழி மற்றும் சரத் குமாரின் பெயர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டன. தயாளு அம்மாளின் பெயர் சேர்க்கப்படவில்லை. இதற்கு, "தயாளு அம்மாளுக்குத் தமிழைத் தவிர வேறு மொழிகள் தெரியாத காரணத்தாலும் மிக வயதாகி விட்ட காரணத்தாலும் அவரின்  பங்குகளில் உள்ள முழு அதிகாரத்தையும் கவனிக்கும் பொறுப்பு சரத் குமாருக்கு 27.07.2007 அன்றே கலைஞர் டிவியின் போர்டு மீட்டிங் கூடி கொடுத்துவிட்டதற்கான மினிட்ஸை சிபிஐ விசாரணையின் போது சரத்குமார் சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளார். இதன் காரணத்தாலேயே குற்றப்பத்திரிக்கையில் தயாளு அம்மாள் பெயர் சேர்க்கப்படவில்லை" என்று கூறப்படுகிறது.
தயாளு அம்மாள் பெயர் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப் படாததற்கு அவருக்குத்  தமிழ் தெரியாது, சரத்துக்கு பவர் ஆப் அட்டர்னி கொடுத்து விட்டார் என்று காரணம் கூறும் சிபிஐ, ஒரு தொலைக் காட்சியின் நிர்வாக இயக்குனர் என்ற ஒரு பொறுப்பைத் தவிர அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நேரடியாகவோ மறைமுகமாகவோ முடிவெடுக்கும் எந்த அதிகாரத்திலோ இல்லாத சரத் பெயரைச் சேர்த்தது ஏன் என்றும் புரிய வில்லை.

 இந்த மினிட்ஸே பின்னர் உருவாக்கப்பட்டது என்றும் தயாளு அம்மாளை வழக்கில் சேர்க்காமல் தப்புவிப்பதற்காக தயாரிக்கப்பட்டது என்றும் கருதப்படும் நிலையில், மே மாதம் 6 ஆம் தேதி சரத்குமாரும் கனிமொழியும் கைது செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனிமொழியின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்ட தகவல் கிடைத்ததும் அதுபற்றி விவாதிப்பதற்காக கூடிய தி.மு.க உயர் நிலை கூட்டத்தில் கலைஞர் பேசும்போது, "நான் எப்போதும் கட்சியைக் காட்டிக்கொடுப்பவனல்ல. என்னைக் கைது செய்தபோதெல்லாம் சந்தோசமாக ஏற்றுக்கொண்டு சிறை சென்றவன்" என்று கூறியுள்ளது, கனிமொழியின் கைது தவிர்க்கமுடியாதது என்று கலைஞரே நம்புவதாகத்தான் கருதமுடிகிறது. அவ்வாறு கைதுசெய்யப்பட்டால், கட்சிக்கு எதிராக காட்டிக்கொடுக்காதே என தன் மகளுக்குக் கலைஞர் தெரிவித்த செய்தியாகவும் இது பார்க்கப்படுகிறது.
இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு, "நான் மனம் விட்டு பேச நிறைய இருக்கிறது" என கனிமொழி கூறிய பூடக கருத்தும் இதையே உறுதிபடுத்துவதாக உள்ளது.

ராசாவும் நேற்று தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் 2G ஊழல் குறித்த எல்லா உண்மைகளையும் வெளிப் படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
"ஊழல் புரிந்தவர்கள் எவ்வளவு பெரிய பதவிகளில் இருந்தாலும் சிபிஐ அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கத் தயங்கக் கூடாது; சிபிஐ பயமின்றி, சுதந்திரமாக செயல்படவேண்டும்" என்று தெரிவித்துள்ளார் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங். நடவடிக்கை எடுக்க அல்ல, விசாரிக்க செல்லவே குற்றம் செய்தவர்கள் எனக் கருதப் படுபவர்களிடம் நேரம் கேட்டுச் செல்லும் நிலையிலுள்ள சிபிஐ, பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என வழக்கைத் திசை திருப்பிவிடாமல் 2G முறைகேடு வழக்கில் பயன் பெற்ற அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவது இது போன்ற ஊழல் இன்னொருமுறை அரங்கேறாமல் இருக்க வழிவகுக்கும். 
ஆக மொத்தத்தில் 2ஜி, கலைஞர் குடும்பத்துக்குத் தீராத தலைவேதனையை உருவாக்கியுள்ளது மட்டும் நிச்சயம். 2 ஜி ஊழிப்பேரலை, குற்றவாளிகளைப் பூண்டோடு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப் போய்விடாதவாறு கடிவாளம் போட்டு வைக்குமா இல்லையா என்பதை நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவும் தீர்மானிக்கும்! பொறுத்திருந்து பார்ப்போம்!

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கொல்றாங்கோ..! கொல்றாங்கோ..?

கடந்த முறை அதிமுக ஆட்சி முடிந்து தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றபோது 1991-96 வரை அ.தி.மு.க ஆட்சியில் நடந்த ஊழல்கள் பட்டியலிடப்பட்டு, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் அனைத்து அமைச்சர்கள் மேல் பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

 இதனால் அதிமுக கடும் பின்னடைவை சந்தித்ததோடு இனிமேலும் அதிமுகவில் தொடர்ந்தால் வழக்குகள் பாயும் என்ற பயத்தில் முன்னாள திமுக அமைச்சர்கள் சிலர், தி.மு.கவில் தஞ்சம் புகுந்தனர். மேலும் சிலர், அரசியலில் இருந்து, "வேணாம்டா சாமி, விட்டால் போதும்' என்று ஒதுங்கி வழக்குகளிருந்து தப்பித்தனர். திமுக அரசு பதிவு செய்த வழக்குகள் காரணமாக, அ.தி.மு.கவின் செல்வாக்கு கணிசமாகச் சரிந்து அடுத்தடுத்த தேர்தல்களில் கடும் பின்னடைவைச் சந்தித்தது.

2011 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அக்கட்சி தலைமை உறுதி நம்புகிறது. அவ்வாறு ஆட்சி அமையும் போது,"1996 இல் அ.தி.மு.கவுக்கு எதிராக ஊழல் வழக்குகள் மூலம் நெருக்கடி கொடுத்ததுபோல், தற்போது தி.மு.கவுக்கு கொடுக்க வேண்டும்' என அதிமுக தலைமைக்கு விசுவாசமாக இருந்து உயர் பதவியைப் பிடிக்கத் திட்டமிட்டுள்ள அரசு அதிகாரிகள் காய் நகர்த்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் பட்சத்தில் கடந்த ஐந்தாண்டு கால, தி.மு.க., ஆட்சியில், துறை வாரியாக நடந்த முறைகேடுகள், ஊழல் விவகாரங்களை ஆதாரங்களோடு பட்டியல் போட்டு, அ.தி.மு.க., தலைமையிடம் கொடுத்துள்ளதோடு அதிமுக ஆட்சி அமைந்ததும்,இவற்றின் அடிப்படையில், முதல்வர் கருணாநிதியில் துவங்கி, முக்கிய அமைச்சரவை சகாக்கள்மீது வழக்குகள் பதிவாகும் என்று கூறப்படுகிறது.

2G வழக்கின்மூலம் துள்ளி எழுந்துள்ள அதிமுகவுக்கு பன்னாட்டு தொழில் நிறுவனங்களுடன் திமுக அரசு செய்து கொண்ட ஒப்பந்தங்களின் பின்னணி குறித்தும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் குறித்தும் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய தலைமைச் செயலகம் கட்டுமானப்பணிகள்,செம்மொழி மாநாட்டின் போது கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 1,000 கோடி ரூபாய்க்கு மேலான வளர்ச்சிப் பணிகள் போன்றவற்றில் நடந்த குறைபாடுகளையும் தொகுத்து அதிமுக தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அமைச்சர்கள் சிலர் மீது எழுந்துள்ள கொலை சம்பவங்களில் தொடர்பு, நில ஆக்கிரமிப்பு, மிரட்டல், கட்டப் பஞ்சாயத்து போன்ற புகார்களின் அடிப்படையிலும் வழக்குகள் படிவு செய்யப்படலாம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.